குண்டூர்: தான் படித்த ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம் வாங்குவதை பெருமையாக கருதுகிறேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு, நேற்று குண்டூர் ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலை சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன் பின்னர், இவ்விழாவில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது, ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக் கழக முன்னாள் மாணவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். படித்த அதே பல்கலைக் கழகத்தில் எனக்குமுனைவர் பட்டம் வழங்கியதற்குஎனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலையின், 37மற்றும், 38-வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கிய அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதைய சூழ்நிலையில், கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இது வரவேற்க தக்கதாகும். இந்த பல்கலையில் படித்த பலர் உன்னத நிலையை எட்டியுள்ளனர். தொழிற்கல்வி படித்தோருக்கு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது. நானும் இதே பல்கலையில் தான் படித்தேன். அப்போது இத்தனை அறைகள் இல்லை. சமூக அக்கறையுடன் பல விவாதங்களை நாங்கள் மேற்கொண்டோம்.
இப்போதைய மாணவர்களுக்கு அந்த அக்கறை குறைந்துவிட்டது. மக்கள் எதற்காக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். என்பதை அறிந்து அதற்கு வழியை காண மாணவர்கள் முயல வேண்டும். இந்த விழாவில்ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன். அமைச்சர் சத்யநாராயணா, பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜசேகர் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், விஜயவாடா சூர்யராவ் பேட்டையில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்சநீதி மன்றதலைமை நீதிபதி என்.வி. ரமணா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.