ஆன்லைன் மோசடிகள், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன் என ஓ.டி.பி நம்பரைப் பெற்று வங்கி கணக்கிலிருந்து பணத்தை நூதன முறையில் சைபர் க்ரைம் குற்றவாளிகள் எடுத்து வந்தனர். அதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார், விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு ஓரளவு வங்கி அக்கவுன்டிலிருந்து பணம் எடுக்கும் குற்றங்கள் குறைந்துள்ளது. தற்போதெல்லாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி புது புதுசாக ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் `பாஸ் ஸ்கேம்’.
பாஸ் ஸ்கேம் என்னவென்று சமீபத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஆன்லைன் மோசடியில் புதிய வகை மோசடி வந்திருக்கிறது. நீங்கள் எங்கு வேலைப்பார்க்கிறீர்களோ, அந்த அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் நான் மீட்டிங்கில் இருக்கிறேன், அமேசான் கூப்பன் வாங்கி அனுப்புங்க, அதற்கான பணத்தை அனுப்பி வைத்துவிடுகிறேன்” என்று உயரதிகாரியின் செல்போன் நம்பரிலிருந்தே அழைப்பு வரும். அவசரம் என்று சொல்வதால் அந்த அமோசன் கூப்பனை நீங்களும் வாங்கி அனுப்புவீர்கள். ஒரு கூப்பனின் விலை பத்தாயிரம் ரூபாய். பத்து கூப்பன்களை அனுப்புங்கள் என்று மோசடி கும்பல் சொல்லும்போது நீங்களும் நம்முடைய உயரதிகாரிதானே சொல்கிறார் என்று நம்பி ஒரு லட்சம் ரூபாய்க்கு கூப்பன்களை வாங்கி அனுப்பி வருகின்றனர்.
பரிசு கூப்பனை எப்படி வாங்குவது என்று கேட்டால் அதற்கு ஒரு லிங்க் ஒன்றையும் மோசடி கும்பல் செல்போனுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகும் இன்னும் பத்து கூப்பன்களை வாங்கி அனுப்புங்கள் என்று மெசேஜ் வரும். அதன்பிறகுதான் நீங்கள் பணத்தை இழந்தது தெரியும். இவ்வாறு தொடர்ந்து கூப்பன்களைக் கேட்கும் போதுதான் நீங்கள் ஏமாந்தது தெரியும். அவ்வாறு ஏமாந்தது தெரிந்தால் காவல்துறையின் 112 அல்லது 100-க்கு தொடர்பு கொள்ளலாம். காவல் உதவி என்ற ஆப்பை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு ஆன்லைன் மோசடி டச் செய்தால் 1930-க்கு சென்றுவிடும். உடனடியாக தொடர்பு கொண்டால் உங்களின் பணத்தை காப்பாற்றிக்கொள்ளலாம்.
இந்த மோசடிக்கு பெயர் பாஸ் ஸ்கேம். நீங்கள் வேலைப்பார்க்கும் உயரதிகாரியின் செல்போன் நம்பரிலிருந்து வருகிற மாதிரியே சைபர் கும்பல் அனுப்புவார்கள். தனியார் கம்பெனி, அரசு ஊழியர்கள் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். பணத்தை இழப்பதோடு மானம், தன்னம்பிக்கை போய்விடும். இந்த மோசடி குறித்து வெளியில் சொல்லவும் தர்மசங்கடமாக இருக்கும். எனவே விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று அந்த வீடியோவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியிருப்பார்.
இந்த வீடியோ வெளியிடுவதற்கு பின்னணி குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நான் டி.ஜி.பி பேசுகிறேன்” என தமிழக காவல்துறையிலிருக்கும் எஸ்.பி-க்கள், டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு சைபர் க்ரைம் கும்பலிடமிருந்து போன் அழைப்பு சென்றுள்ளது. அதை உண்மையென நம்பியவர்களிடம், கிஃப்ட் கூப்பனை வாங்கி அனுப்பும்படி அந்தக் கும்பல் தெரிவித்துள்ளது. அவ்வாறு கூப்பனை அனுப்பிய காவல்துறையினர் பணத்தை இழந்து வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். காவல்துறையினர் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். எனவே ஆன்லைன் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றனர்