தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகள், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை, இதற்கிடையில் ரெசசன் அச்சம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக தங்கமானது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் ஒரு பாதுகாப்பு புகலிடமான பார்க்கப்படுகிறது.
6 மாதமாக நடக்கும் போர்.. சர்வதேச பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் சவால்கள்..!
பாதுகாப்பு புகலிடம்
பொதுவாகவே தங்கம் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படும் நிலையில், அதற்கு வட்டியும் கொடுத்து, விலை நிலவரத்திற்கு ஏற்ப விற்பனை செய்து கொள்ளலாம். வட்டி விகிதம், வரி சலுகை, பாதுகாப்பு, டிஜிட்டல் வடிவம், தங்கத்தினை போல பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என சலுகைகள் இதில் உள்ளன. அதோடு ரிசர்வ் வங்கி இப்பத்திரங்களை வெளியிடுவதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.
எப்போது தொடக்கம்?
நிலவி வரும் நெருக்கடியான காலக்கட்டத்தில், இந்த பத்திரங்கள் மிக சிறந்த முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது சீரிஸ் ஆனது, ஆகஸ்ட் 22, 2022 அன்று தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று முடிவடையவுள்ளது. ஆக இந்த 5 நாட்கள் இந்த இறையாண்மை தன்மை கொண்ட தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
விலை எவ்வளவு?
ஒரு கிராம் தங்கம் விலை 5197 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே இந்த பத்திரங்கள் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். அப்படி ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் 5,147 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
யாரெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்தியர்கள், ஹெச் யு எஃப் (HUFs), அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழங்கள், தொண்டு நிறுவனங்கம் என பலரும் வாங்கி வைக்கலாம்.
எப்படி வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். இங்கு தவிர வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். இன்றைய காலத்தில் வங்கிகளின் டிஜிட்டல் தளத்தின் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி எவ்வளவு?
ஆபரணத் தங்கமாக வாங்கினால் அதற்கு வட்டி கிடையாது. மாறாக செய்கூலி, சேதாரம் என கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
எவ்வளவு வாங்கலாம்?
பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
கால அவகாசம்
இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
வரி சலுகை?
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
கவர்ச்சிகரமான முதலீடு
ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திர திட்டம் என்பது, பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
SGB updates: Sovereign Gold Bond Scheme opens tomorrow: key things to know
SGB updates: Sovereign Gold Bond Scheme opens tomorrow: key things to know/நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. மிஸ் பண்ணீடாதீங்க..!