புனே: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்து வருவதால், பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 1923-ம் ஆண்டு இந்திய சட்ட சங்கம் (ஐஎல்எஸ்) தொடங்கப்பட்டது. இதன் சார்பில் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், ஐஎல்எஸ் நடுவர் மன்றம் மற்றும் சமரச மையத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் தனது தந்தையும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான ஒய்.வி.சந்திரசூட் நினைவுசொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் குவிந்து பெரும் சுமையாக மாறி வருவதை நாம் அனைவரும் அறிவோம். பிஆர்எஸ் சட்ட ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.8 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தாலுகா, மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும்4.1 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 59 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், சமரசம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடைமுறை மிகவும் அவசியமாகிறது. சட்ட நடைமுறைக்கு அப்பாற்பட்டு பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண இது முக்கிய கருவியாக இருக்கும்.
உலகம் முழுவதும் சமரச நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்திய நாடாளு மன்றத்திலும் ‘சமரச மசோதா 2021’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனினும், இந்த மசோதா குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித் துள்ள கருத்துகள் சமரச நடை முறை அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.