பாஜக மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் திமுகவில் இணைந்த விவகாரத்தால் பாஜக நிர்வாகிகள் புலம்பலில் உள்ளனர். தென்மாவட்டங்களில் காலூன்றியாக வேண்டும் என்ற இலக்கில் பாஜக இருந்து வருகிறது. முதலில் மதுரையை கைப்பற்றிவிட்டால் மற்ற மாவட்டங்களை எளிதாக அடைந்து விடலாம் என்று எண்ணி மதுரை மாவட்ட பொறுப்பு டாக்டர். சரவணனுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், ஒரேநாளில் திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு அதே நாளில் திமுகவில் இணைந்துவிட்டார் டாக்டர் சரவணன். இந்த நிலையில் காரைக்காலில் இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில், டாக்டர் சரவணனின் கட்சி தாவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எச். ராஜா, தமிழக நிதியமைச்சரை கடுமையாக பேசிவிட்டு 6 மணி நேரத்தில் திமுகவில் டாக்டர் சரவணன் இணைந்துவிட்டார். அவரை அடித்து கூட சேர்த்து இருக்கலாம் என கூறினார்.
பின்னர் புதுச்சேரியில் வளர்ச்சி, மாற்றம் குறித்து கேட்டபோது, ராகுல் காந்திக்கு செருப்பை போட்ட முதலமைச்சர் தற்போது இல்லை. அதுவே நல்ல மாற்றம் என கூறினார். ஆனால், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, பத்திரிகைகள் சில திமுகவின் கைக்கூலியாக மாறியுள்ளது என எச். ராஜா விமர்சித்தார். மேலும், அங்கிருந்த குறிப்பிட்ட பத்திரிகையாளரை எச். ராஜா தொடர்ந்து விமர்சித்து பேசிய நிலையில் பிரெஸ் மீட் ஓவர் என்று கூறி எழுந்து நகர்ந்தார்.
அப்போது, அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர் மீது கடுப்பான பாஜகவின் காரைக்கால் மாவட்ட தலைவர் துரை.சேனாதிபதி, பத்திரிகையாளரின் மதத்தின் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.