மும்பை போலீஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிரா டிஜிபியாகவும் இருந்த சிவானந்தன் என்பவர் சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனைத்து முக்கியமான குற்றவியல் விசாரணைகளையும் மத்திய அரசின் நிறுவனங்களான அமலாகத்துறை, சிபிஐ, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிடம் ஒப்படைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கொள்கை மாநில காவல்துறைகளை களங்கமடைய செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரே அதிகார மையம் வேண்டும் என்பது இந்து தீவிர வலதுசாரிகளின் கனவாக இருக்கும் நிலையில், அவர்களது அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கு அரசு இயந்திரங்களை ஒற்றை மயமாக்கும் இந்த முயற்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் அதன் அர்ப்பணிப்புமிக்க குற்ற விசாரணைப் பிரிவைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. கடினமான வழக்குகள் வெற்றிகரமாக தீர்க்கப்படுவதால் மாநில காவல்துறைகள் பெருமை கொள்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த வழக்குகளின் விசாரணைகள் வெற்றிகரமாக தீர்க்கப்படும் போது, ஒட்டுமொத்த காவல்துறையின் மன உறுதியும் மேம்படும். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மாநில காவல்துறை விசாரணையை முடிக்கும் தருவாயில், சிபிஐக்கு கைமாறும் வழக்குகள் பற்றி பேசப்பட்டிருப்பதை இங்கு நினைவுகூரலாம். அப்படிப்பட மன உறுதியை மெல்ல உடைக்கும் முயற்சிகளில் டெல்லி பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுன் மாநில போலீசார் குறித்து கவலைப்படவில்லை என்பதை தள்ளி வைத்து பார்த்தாலும், ஒரு குடிமகனின் உள்ளார்ந்த எண்ணங்கள், உணர்வுகள் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் கட்சியாக ஒன்றுபட்ட ஒரே இந்தியாவை நிறுவும் முயற்சிகள் வேதனை அளிப்பதாக உள்ளது. அனைத்து முடிவுகளையும் பிரதமர் அலுவலகமே எடுக்க வேண்டும் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பல்வேறு கலாசாரங்களை, பண்புகளை கொண்ட இந்திய மக்களுக்கும் எது நல்லது? எது கெட்டது என்பது எபப்டி தெரியும் என்ற கேள்வியும் எழுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பாதி வாக்காளர்கள் மோடிக்கும் பாஜகவுக்கும் வாக்களிக்கவில்லை. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற அவரது முழக்கம், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14% இருக்கும் சிறுபான்மை சமூகத்தால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு இந்தியரின் நலனையும் பாஜக உண்மையில் விரும்புகிறது என்று நம்பாத பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, தலித்துகள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தாங்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்தே இருக்கிறார்கள்.
குஜராத் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தலித்துகளால் சமைக்கப்பட்ட உணவை இதர பிற்படுத்தப்பட்ட குழந்தைகள்கூட சாப்பிட மறுப்பதாக கூறப்படுகிறது. திருமண ஊர்வலங்களில் குதிரை சவாரி செய்யத் துணிந்தால் தலித் மாப்பிள்ளைகள் தாக்கப்படுகிறார்கள். குஜராத் மாடல் என்ற பிம்பம் காட்டப்படும் போது, அங்கு நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து போக முடியாது.
பாஜக ஆதிக்கம் செலுத்தும் இந்தி பெல்ட்டைக் கொண்ட அண்டைப் பின்தங்கிய மாநிலங்களில் ஒருவர் என்ன எதிர்பார்க்கிறார்? சிறுபான்மையினரிடையேயும், பெரும்பான்மையினரிடையே புறக்கணிக்கப்பட்டவர்களிடமும் உள்ள உண்மையான உணர்வு என்னவென்றால், பிராமண சாதுர்வர்ண படிநிலையை மீண்டும் நிறுவ அரசாங்கம் முனைகிறது. இது முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வெகுஜன உதாரணங்கள், உணர்வுகள் அப்படித்தான் இருக்கிறது. பெரும்பாலான ஆதிக்க சாதிகளை சேர்ந்த நமது நண்பர்களிடம், புதிய இந்தியாவில்’ பழைய சமூக அமைப்பு மீட்டெடுக்கப் போகிறது என்ற வெற்றி உணர்வை நாம் காணலாம்.
சிவானந்தன் கூறியது போல், மத்திய புலனாய்வு அமைப்புகளின் புது வரவால், மாநில காவல்துறையில் உள்ள பழைய மன உறுதிகள் குறைந்து கொண்டிருக்கிறது. மாநில காவல்துறைகளை களங்கமடைய செய்து கொண்டிருக்கிறது. ஆனால், எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து அதிகாரங்களும் ஒரே உச்ச அமைப்பில் குவிக்கப்பதற்காக வேண்டுமென்றே வெளிப்படையாக வேலை செய்யும் திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் மாநில அரசின் பங்கு அதன் கொள்கைகளை செயல்படுத்துவதில் மட்டுமே இருக்கும். ஆனால், பாஜக கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஆயுதப் படைகளை இந்த நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் மத்திய அரசு கொண்டிருப்பதாக தெரிகிறது. மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் அச்சுறுத்தலை உணரும் போதெல்லாம், சிஆர்பிஎஃப் அல்லது சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தின் அடையாளமாக மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். இது மாநில காவல்துறைக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலான உறவை மோசமாக பாதிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. துணை ராணுவம் ஒரு மாநிலத்துக்கு அனுப்பப்படும் போதெல்லாம். மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலேயே அனுப்பப்பட்டது.
இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை காட்டுகிறது. இது ஒற்றையாட்சி அரசு உருவாக உதவி செய்யும் என்பதால் கூடுதல் அச்சம் ஏற்படுகிறது.