புதுடெல்லி: அடுத்த ஆண்டு டிசம்பரில் ம.பி. மற்றும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் இந்த 2 மாநில தேர்தலுக்காக பாஜக பல புதிய வியூகங்களை அமைத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தேசிய அளவில் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பல மாற்றங்களை செய்தது. பாஜக ஆளும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி மன்றக் குழுவில் இருந்தார். கடந்த வாரம் இவரை நீக்கி, மாநிலத்தின் தலித் தலைவர் சத்யநாராயண் ஜாட்டியா சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம்ம.பி.யில் தலித்களின் வாக்குகளை முழுமையாக பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜக.வில் இணைந்தார். அதன் பலனை பாஜக பெற்று வருகிறது. எனவே, இந்த தேர்தலிலும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும் தேர்தல் முடிவுகளுக்கு பின் அவருக்கு பதில் வேறு தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், 2014 மக்களவை தேர்தலின்போது நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை சிவராஜ் சிங் எதிர்த்தார். அதனால், மாநில தேர்தலுக்கு பிறகு சிவ்ராஜ் சிங் மாற்றப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் ராஜஸ்தானிலும் புதிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இங்கு பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் மற்றும் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூணியா ஆகிய மூவரும் முதல்வர் பதவிக்காக முயற்சிக்கின்றனர். மூவரும் தேசியபாஜக தலைமையின் உத்தரவுகளை தவிர்த்து, தனித் தனியாக செயல்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே, இந்த முறை ராஜஸ்தானில் பாஜக தனது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது.
ம.பி., ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களின் அரசியல் சூழலும் பாஜக.வுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில், ம.பி.யில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர்கள் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங்குக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இவர்களின் அடுத்த நிலையில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் பாஜக.வில் இணைந்துவிட்டார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையே மோதல் நிலவுகிறது. இவற்றை சாதகமாக்கி 2 மாநிலங்களிலும் வெற்றி பெறுவதுடன், 2024 மக்களவை தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.