புதுடெல்லி: டெல்லியில் புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் அது சோதனை நடத்தியது. இதில், முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘இன்டோஸ்பிரிட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும் , தனியார் மதுபான வியாபாரியுமான சமீர் மகேந்திரு தான், அரசின் புதிய கலால் கொள்கையை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். இவர் மூலமாக சிசோடியாவுக்கு ரூ.2 கோடி கைமாறியதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சிசோடியா, முன்னாள் கலால் ஆணையர் கிருஷ்ணா, கலால் வரித்துறை முன்னாள் துணை ஆணையர் ஆனந்த் திவாரி, துணை கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், 9 தொழிலதிபர்கள் மற்றும் 2 நிறுவனங்கள் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இவர்களில் பலருக்கு நேற்று அது சம்மன் அனுப்பியது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.