புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டிபூசல் உச்சக்கட்டமாகி மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் தலைவர் நியமனம் தொடர்பாக தொடர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஒரு தரப்பு ஈடுபட்டது. அத்துடன் அவரது காரை வழிமறித்து போராடினர்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வலுத்து வருகிறது மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் அகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
மாநில தலைவரை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உடனே மாற்ற வேண்டும், புதுவை காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமியின் தலையீட்டை அனுமதிக்க கூடாது என்று முன்னாள் அமைச்சர்கள் தரப்பினர் போர் கொடி தூக்கினர். மேலும், இவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு புகார் கடிதமும் அனுபபினர், இந்நிலையில் அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இன்று புதுவை வந்தார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பேச வேண்டும் என வலியுறுத்தினர். அவர் கூட்டத்தில் பங்கேற்று மீண்டும் வந்து பேசுவதாக கூறினார். இதையடுத்து அவர் கூட்டத்திற்கு செல்ல அதிருப்தியாளர்கள் அனுமதித்தனர்.
இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் கூட்டத்தில் . ஆனால் 2 மணி நேரம் ஆகியும் கூட்டம் முடிந்து அவர் வெளியில் வரவில்லை. இதனிடையே. தினேஷ் குண்டுராவை வழிமறித்த விஷயம் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வர தொடங்கினர்.
இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டது. இதனிடையே, அலுவலகத்தின் வெளியில் இருந்தவர்கள் தினேஷ் குண்டுராவை வெளியில் வர சொல்லி கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து அவர் வெளியில் வந்தார். உடனே அவரை சூழ்ந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர் சோனியாவிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அறிக்கை கொடுப்பது மட்டும் தான் வேலை எனக் கூறினார். அதற்கு, தேர்தல் தோல்விக்கு பிறகு ஓராண்டாகியும் தலைவரை மாற்றாதது ஏன் என்று தொடர் கேள்விகளை எழுப்பினர். பின்னர், அதிருப்தியாளர்கள் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் பெற்றுத்தரும்படி கேட்டனர். அதற்கு பதில் கூறாமல் அவர் காரில் ஏறினார். இதனால் கூடியிருந்த அதிருப்தியாளர்கள் ஆத்திரத்தில் காரை வழிமறித்துப் போக விடாமல் தடுத்தனர்.
கார் கண்ணாடியை கையால் தட்டியும், காரின் முன்பகுதியில் கையால் குத்தியும் காரை செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் கார் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். இதனையடுத்து கார் அங்கிருந்து சென்றது. அப்போது அதிருப்தியாளர்கள் காரின் மீது மண்ணை தூவினர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பரபரப்பும் பதற்றமுமாக காணப்பட்டது.