பெங்களூரு: பெங்களூருவில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஹைஃபா என்ற பெண் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் அனைவரும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்பீர்கள். எனக்கு சுதந்திர தினம் எப்படி கழிந்தது பாருங்கள்” என பதிவிட்டு, அவருக்கும் வாடகை வீடு பிடித்து தரும் தரகருக்கும் இடையே நடந்த உரையாடலின் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் பதிவை பகிர்ந்திருந்தார்.
அதில், தரகர், ‘நீங்கள் இந்து குடும்பமா?’ என கேட்கிறார். அதற்கு ஹைஃபா, ‘இல்லை’ என்கிறார். உடனடியாக அவர், ‘வீட்டின் உரிமையாளர் இந்து குடும்பத்தினருக்கு மட்டுமே வீடு தருவதாக கூறியுள்ளார்’ என பதிலளிக்கிறார். மற்றொரு வாட்ஸ் அப் பதிவிலும், முஸ்லிம் என்பதால் வீட்டு உரிமையாளர் வீடு தர மறுக்கும் உரையாடல் இடம்பெற்றிருந்தது.
ஹைஃபாவின் இந்தப் பதிவு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டுள்ளனர். வேறு பலர் தங்களுக்கும் மதம், சாதியின் காரணமாக வீடு மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் ஹென்னூர், “சாதி, மதம், மொழி, இனம் ரீதியாக வீடு வாடகைக்கு விட மறுப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.