மதுரை: போதை ஊசிக்காக வலி மாத்திரையை விற்ற மருந்து கடைக்காரரின் செயலால் ஒட்டு ெமாத்த சமுதாயமும் பாதிக்கும் என்று கூறி, முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. மருந்துக்கடை நடத்தி வருகிறார். போதை ஊசிக்கு பயன்படுத்துவதற்காக வலி மாத்திரையை விற்றதாக புதுக்கோட்டை டவுன் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அரசு கூடுதல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘அதிக திறன் கொண்ட வலி மாத்திரையை சிலர் போதைக்காக தவறாக பயன்படுத்துகின்றனர். மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மாத்திரையை விற்கக் கூடாது. இந்த மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டு போதையை ஏற்றுகின்றனர். தொடர்ச்சியாக பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவரது மருந்துக்கடையில் தான் இந்த மாத்திரையை வாங்கியுள்ளனர். கைதானவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீதான குற்றசாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த குற்றத்தால் ஒட்டுமொத்த சமூகமும் பெரியளவில் பாதிக்கப்படும். மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் உண்மை தெரிய வரும். எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.