புதுடெல்லி: மதுக்கடை உரிமம் ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன.
இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, துணை முதல்வரின் கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணப் பரிமாற்ற மோசடி
இந்த வழக்கில் மணிஷ் சிசோடியா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பிரிவுகள், பணப் பரிமாற்ற மோசடி தொடர்பானவை. இது தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆர், பறிமுதல் செய்த ஆவணங்களின் நகல்கள் ஆகியவை அமலாக்கத் துறையிடம் இதுவரை வழங்கப்படவில்லை. “ஆவணங்கள் கிடைத்தவுடன் சிசோடியா மீதான நடவடிக்கை தொடங்கும். யாரிடம் இருந்து, யாருக்கு பணம் கைமாறியது, எப்போது, எந்த வகையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றது என்ற கோணத்தில் விசாரணை நடத்துவோம்” என்று அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 நாட்களில் கைது
இதற்கிடையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லி அரசின் சுகாதாரம், கல்வித் துறை சேவைகளை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது. இதை சகிக்க முடியாமல், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சிபிஐ அதிகாரிகள் என்னைக் கைது செய்வார்கள்.
புதிய மதுபானக் கொள்கை ஒளிவு மறைவற்றது. இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. எனினும், துணைநிலை ஆளுநரின் முடிவால் அந்தக் கொள்கை கைவிடப்பட்டது. இதனால் டெல்லி அரசுக்கு ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருகிறது. முதல்வர் கேஜ்ரிவால் ஏழைகள், சதாரண மக்களுக்காகப் பாடுபடுகிறார். இதற்கு மாறாக, பிரதமர் மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார்.
நாட்டின் முன்னேற்றத்தில் பிரதமர் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களின் அரசைக் கவிழ்ப்பதில்தான் பிரதமர் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
மக்கள் கேஜ்ரிவாலை விரும்புகின்றனர். அவரது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி, கேஜ்ரிவாலுக்கு இடையே நேரடிப் போட்டி இருக்கும். இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
பாஜக குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “மணிஷ் சிசோடியா தற்போது மணி சிசோடியாவாக மாறிவிட்டார். மதுக்கடை உரிமம் ஊழல் விவகாரத்தில், உண்மையான குற்றவாளி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். அவரது உத்தரவின் பேரிலேயே சிசோடியா பணம் வசூல் செய்தார். இந்த ஊழல் குறித்து நாட்டு மக்களுக்கு கேஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
டெல்லி பாஜக எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, பர்வேஷ் வர்மா கூறும்போது, “கலால் துறை அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா, மதுக்கடை உரிமை யாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார். ஒவ்வொரு மதுக்கடை உரிமத்துக்கும் 12 சதவீத கமிஷன் பெறப்பட்டது. இந்த வகையில் பெறப்பட்ட பணத்தைதான், பஞ்சாப், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி வாரி இறைத்தது. இடைத்தரகர்களாக செயல்பட்ட 2 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பி விட்டனர்” என்றனர்.
இதற்கிடையில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோஜ் நாக்பால் நேற்று அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவர் கூறும்போது, “ஊழலை ஒழிப்போம் என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியில் தற்போது ஊழல் கறை படிந்துவிட்டது. அக்கட்சியின் கொள்கையால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, நான் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன்” என்றார்.