ஜெனீவா: உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா தொற்று குறித்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் தற்போதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 15,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மரபணு மாற்றங்களை கொண்ட வேகமாக பரவும் கொரோனா தொற்று வைராஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று எனும் பேரழிவு தற்போது வரை சுமார் 64.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்டுள்ளது. 59.6 கோடிக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதும் வாரத்திற்கு சுமார் 15,000 பேர் இந்த தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஆனால் தடுப்பூசி இந்த உயிரிழப்புகளை கணிசமாக குறைத்துள்ளது. ஆனாலும் மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் இந்த தொற்று பாதிப்பு பரவல் மற்றும் உயிரிழப்பை தடுப்பது குறித்த வழிக்காட்டுதல்களை கொண்ட புதிய புத்தகம் ஒன்றை டிவிட்டரில் அறிமுகப்படுத்திய அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 4 வாரங்களில் சுமார் 15% அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல உயிரிழப்பும் 35% அதிகரிப்பு இருப்பதாக கெர்கோவ் கூறியுள்ளார். மேலும், மரபணு மாறிய வைரஸ்கலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அவர் எடுத்துரைத்த அவர், உலக நாடுகள் பலவற்றில் கண்காணிப்பு, சோதனை மற்றும் அடையாளம் காணும் வசதிகள் இல்லாதது இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்தலை குறைக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது என்றும் கூறியுள்ளார். அதேபோல தற்போது BA5 வகை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதையும் கெர்கோவ் சுட்டிக்காட்டியுள்ளார்..
இவ்வாறு பரவி வரும் வைரஸ்கள் எதிர்காலத்தில் அதிக மரபணு மாற்றங்களை கொண்டிருக்கலாம். இது நோயெதிரப்பு தடுப்பூசிகளிலிருந்து எளிதில் தப்பிக்கும் திறன் கொண்டவையாகவும் வளரலாம். தற்போது இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே இப்போதே எல்லாவற்றையும் உறுதிப்படுத்திவிட முடியாது என்றும் கெர்கோவ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருந்துவிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல ஆபத்தில் உள்ளவர்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும், உயிரைக் காப்பாற்றுவதற்கு பரிசோதனை, சரியான மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சைகள் மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.