அமராவதி: ‘மாநிலம் பிரிக்கப்பட்டதால் பின்தங்கியுள்ள ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியுதவி அளிக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கோரியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி.ரமணா நேற்று திறந்து வைத்தார். இதில் பேசிய அவர், ‘‘கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு நிதி தொடர்பான விஷயத்தில் ஆந்திரா பின் தங்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு இந்த மாநிலத்துக்கு அதிக நிதியுதவி அளித்து உதவ வேண்டும்.
சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால்தான் நாடு வளர்ச்சி பெறும். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அனைத்து மதத்தினர், சமுதாயத்தினர், பெண்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனது 16 மாத பதவிக்காலத்தில் உயர் நீதிமன்றங்களில் 250 நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள், 17 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்றார். ஆந்திராவை சேர்ந்த என்வி.ரமணா, வரும் 26ம் தேதி ஓய்வு பெறுகிறார்.