சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு 2,400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், பசுமையை காத்தல்,பாதுகாப்பான மின் ஆற்றலை பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பம் முதலே ஊக்கம் அளித்து வருகிறது.
அந்த வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி சாதனங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவியது. குறிப்பாக, கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமையகம், உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளின் கூரையில் சூரிய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வரை6.56 மெகாவாட் அளவுக்கு சூரியமின்சக்தி தகடுகளைப் பொருத்தி,மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் சூரிய ஒளி மின்சக்தி தகடுகளை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளின் கூரையில் சூரிய ஒளி மின்சாதனங்களை நிறுவ மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.2 கோடி சேமிப்பு
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ரயில் இயக்கம், ரயில் நிலையங்களில் பயன்பாடு உள்ளிட்டவற்றில் ஏற்படும் செலவில் மின்சாரத்தின் பங்கு மட்டும் 40 சதவீதம் ஆகும்.முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மொத்தம் 6.56 மெகாவாட்அளவுக்கு சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் நிறுவப்பட்டு, இதன்மூலமாக தினமும் சராசரியாக 28,752 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு சராசரியாக 94.88லட்சம் கிலோவாட் மின்சாரம்உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ.2 கோடி மின்சார கட்டண செலவு சேமிக்கப்படுகிறது.
இதேபோல, 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 52 உயர்மட்ட ரயில் நிலையங்களில் 400 கிலோவாட் வரைசூரிய ஒளி மின்தகடுகள் நிறுவப்பட உள்ளன. மாதவரம், பூந்தமல்லி பணிமனைகளில் மொத்தம்2,000 கிலோவாட் தகடுகளை நிறுவி,மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, ஆண்டுக்கு 2,400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.