புதுடெல்லி: மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பள்ளிகளில் கவனம் செலுத்துகிறார் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை உலகளவில் விவாதிக்கப்படுகிறது. இதனாலேயே நான் சிபிஐ-யால் குறி வைக்கப்படுகிறேன்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதைக் கண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு பீதியடைந்துள்ளது. கலால் கொள்கையில் எந்த மோசடி நடந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை, இல்லையெனில் பாஜக ஆளும் குஜராத்தில் ஆண்டுதோறும் ₹ 10,000 கோடி கலால் வரி ஏய்ப்பு நடக்கும் ஊழலை முதலில் விசாரித்திருப்பார்கள். கள்ளச் சாராயத்தை உட்கொண்டு ஆயிரக்கணக்கானோர் அங்கு இறக்கின்றனர்.
ஒரு பாஜக தலைவர் நாங்கள் முதலில் ₹ 8,000 கோடி ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினார், பின்னர் மற்றொரு தலைவர் ₹ 1,100 கோடி மோசடி செய்ததாகக் கூறினார். இப்போது, 114 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் மதுக் கொள்கையை அமல்படுத்துவதில் முழு வெளிப்படைத்தன்மை இருந்ததால், அவர்களால் எதையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ பயன்படுத்துகிறார். அதே நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பற்றி சிந்திக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.