பாட்னா: ‘புதியதாக கார் வாங்கக் கூடாது, யாரையும் காலில் விழ அனுமதிக்கக் கூடாது,’ என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சர்களுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசில், முக்கிய கூட்டணி கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது. இக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். இவருடைய கட்சியை சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இம்மாநில சட்ட அமைச்சர் கைது வாரன்ட் சிக்கலில் சிக்கி இருப்பதை தொடர்ந்து, தனது கட்சி அமைச்சர்களுக்கு தேஜஸ்வி நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
* யாரும் தங்கள் துறைக்காகவும், தனக்காகவும் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது.
* பிறரை பார்த்தால் மரியாதையுடன் வணக்கம் செலுத்த வேண்டும்.
* யாரும் காலில் விழுவதை அனுமதிக்கக் கூடாது.
* புத்தகம், பேனா போன்றவற்றை மட்டுமே பரிசளிக்க வேண்டும்.
* ஏழைகள் தேடி வரும்போது, ஜாதி, மதம் பார்க்காமல் உதவ வேண்டும்.
* அரசு திட்டங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்