நெல்லை: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவில் சில பகுதிகளும் தென்னக ரயில்வே எல்கையில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழகத்திலும், கேரளாவிலும் படித்தவர்கள் அதிக சதவீதத்தில் உள்ளதால் இந்த 2 மாநிலங்களிலும் 80 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே எடுக்கப்பட்டு வருகின்றன.
அதாவது சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, தெற்கு ரயில்வேயில் 2018ம் ஆண்டில் 26 முதல் 28% பேப்பர் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதன் சராசரி 35 சதவீதமாக உள்ளது. 2019-20ம் ஆண்டுகளில் பேப்பர் டிக்கெட்டின் விற்பனை 22.8 சதவீதமாகவும், 2021-22ல் 21.5 சதவீதமாகவும் சரிந்தது. ஏப்ரல் 2019ல் இருந்து மார்ச் 2020 வரை, மொத்தம் 9.64 கோடி டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஸ்டேஷன் கவுன்டர்களில் எடுக்கப்பட்ட பேப்பர் டிக்கெட்டுகள் 2.20 கோடியாகும். இதன் சதவீதம் 22.8 ஆகும். மீதியுள்ள டிக்கெட் அனைத்தும் ஆன்லைனில் எடுக்கப்பட்டவையாகும்.
இதுபோல் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை மொத்தம் முன்பதிவு செய்யப்பட்ட 10.8 கோடி டிக்கெட்டுகளில், 2.35 கோடி டிக்கெட்டுகள் (21.5%) ஸ்டேஷன் கவுன்டர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மொத்தம் விற்ற 3.11 கோடி டிக்கெட்டுகளில் 57.4 லட்சம் டிக்கெட்டுகள் பேப்பர் டிக்கெட்டுகளாகும். இது 18.4 சதவீதமாகும். அதிலும் கொரோனா காலத்திற்கு பிறகு ரயில் நிலைய கவுன்டர்களுக்கு வந்து டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.இதனால் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆன்லைன் டிக்கெட்டுகளின் விற்பனை அதிகரிப்பதால், பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில் தேவையை பொறுத்து முன்பதிவு மையங்களை திறந்து வைத்துள்ளோம்.