மாஸ்கோ: தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு உக்ரைன் விஷம் வைத்ததாக ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ராணுவம் தரப்பில், “ உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியான சபோரிஜியாவில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு உக்ரைன் விஷம் கொடுத்துள்ளது. இதனால் ஜூலை 31 அன்று கடுமையான உடல் பாதிப்பு அறிகுறிகளுடன் பல ரஷ்ய ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.” என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய வீரர்கள் காலாவதியான இறைச்சியை சாப்பிட்டதால் உடல் நலம் சரியில்லாமல் ஆகி இருக்கலாம் என்று உக்ரைன் விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கொடும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரையில் 4800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. உச்சபட்சமாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தடைவிதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளை முன் நகர்த்தாமல் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.