ரேடியோ வாயிலாக பிரதமரின் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி 2014-ம் ஆண்டு அக்டோபரில் துவக்கப்பட்டது.இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். அவர்களிடம் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்.இந்நிலையில், சாம்ராஜ் நகர் குண்டுலுபேட்டின் ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வர்ஷா, 35. எம்.டெக்., பட்டதாரி.
படிப்பு முடித்ததில் இருந்து தனியாக தொழில் துவங்கி, பலருக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, வாழைத்தண்டிலிருந்து பொருட்கள் உற்பத்தி செய்யலாம் என்பதை குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து வாழைத்தண்டு நாரில் பொருட்கள் செய்யும் வர்ஷா கூறியதாவது:’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதை கேட்டு, வாழைத்தண்டில் செய்யப்படும் பொருட்கள் குறித்து சமூக வலைதளத்தில் ‘யூ டியூப்’பில் தேடிப்பார்தேன். அப்போது தமிழகம் கோயம்புத்துாரில், வாழைத்தண்டு நாரிலிருந்து பொருட்கள் தயாரிக்கப்படுவதை அறிந்தேன்.உடனடியாக கோயம்புத்துாருக்கு சென்று, மூன்று லட்சம் ரூபாயில் இயந்திரம் வாங்கி வந்தேன். உம்மட்டூர் கிராமத்தில் உள்ள எங்கள் பண்ணை வீட்டில், வாழைத்தண்டு நாரில் இருந்து பாய்கள், தரை விரிப்புகள், பைகள், பணப்பைகள் செய்ய துவங்கினோம்.வாழைப்பழத்தின் சாற்றில் பொட்டாசியம் சத்து இருப்பதால், அதை துாக்கி எறியாமல், அதன் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து, தங்கள் பண்ணைக்கு பயன்படுத்துகின்றனர்.என் முயற்சிக்கு, என் கணவர் உறுதுணையாக உள்ளார். மைசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் என் கணவர் ஸ்ரீகண்டசுவாமி, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் எனக்கு உதவியாக உள்ளார்.மேலும், எங்கள் கிராமத்தில் சுற்றி உள்ள வாழைத்தோட்டம் வைத்துள்ளவர்களிடம், அறுவடைக்கு பின், வாழைத்தண்டை தருமாறு கேட்டுள்ளோம். அவர்களும் எங்களுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர். வாழைத்தண்டில் இருந்து நாரை எடுத்து, நுாலாக கோர்த்து, இயந்திரத்தில் சேர்க்கிறோம். அதனை பாய்கள், தரை விரிப்புகள், பைகள், பணப்பைகளாக மாற்றுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement