சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படுகிறது என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது. பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 12 கிராமப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அறிவிப்பு வெளியான நாள் முதலே ஏகனாபுரம் கிராமப்புற மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டிவிட்டும், கருப்பு கொடியை ஏந்தி கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து அம்பேத்கர் சிலை அருகே ஒன்று கூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் தங்கள் கைக் குழந்தைகள் உட்பட கிராமத்தை சேர்ந்த அனைவரும் கலந்துக் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பியும், கண்டன பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சொந்த மண்ணின் மக்கள் இந்த திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.