ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இதில், நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்திலிருந்து முனுகோடு பகுதிக்கு சுமார் 5 ஆயிரம் கார்கள் மூலம் பிரம்மாண்ட ஊர்வலமாக தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
கிருஷ்ணா நதி நீதி பங்கீடு குறித்து இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முனுகோடுவில் எப்போதுமே பாஜகவிற்கு டெபாசிட் கூட வந்தது இல்லை. இம்முறை பாஜகவிற்கு வாக்களித்தால், விவசாய மோட்டாருக்கு மீட்டர் வைத்து விடுவார்கள். ஜாக்கிரதை. பிரதமர் மோடியின் ஆட்சியில் வங்கிகள், ரயில்கள், சாலைகளை கூட மத்திய அரசு விற்று வருகிறது. விரைவில் கட்டிடங்கள், விவசாய நிலங்களை கூட விற்று விடும். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தையும் மத்திய அரசு அமலாக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
உரம் விலை உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற அனைத்திற்கும் பிரதமர் மோடியே காரணம். 2024-ல் நடக்கும் தேர்தலுக்கு பின்னர் நரேந்திர மோடி பெட்டி, படுக்கையுடன் கிளம்ப தயாராக உள்ளார். இவ்வாறு முதல்வர் சந்திர சேகர ராவ் பேசினார்.