புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் பத்து நாட்கள்தான் கூடியுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரி அமைச்சர்கள் ரூ.3.3 கோடிக்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு ரூ. 70 லட்சம் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளனர். சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி ஆர்டிஐயில் கடந்தாண்டு புதுச்சேரி சட்டப்பேரவை கூடிய நாட்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.
அதில் கிடைத்த தகவல்களை மனுவாக ஆளுநருக்கு அளித்துள்ளார். அதன் விவரம்: ”புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு பழைய வாகனங்கள் தவிர்த்து ரூ.3.3 கோடிக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.
முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள், பேரவை தலைவர், பேரவை துணைதலைவர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகியோரின் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனவும், புதுச்சேரி சட்டப்பேரவை பத்து நாட்கள் கடந்த நிதியாண்டில் கூடியுள்ளதாக ஆர்டிஐயில் தகவல் தந்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையுடன் கூடிய மிகச் சிறிய யூனியன் பிரதேசமாகும். இந்நிலையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 10 பேரின் வாகனங்களுக்கு ஓராண்டு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனில், ஒருவருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு எரிபொருள் செலவு ரூ.58,439/- ஆயிரம். இதன்மூலம் இவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியே 480 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுதான். இதில் ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர் என்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக புதுச்சேரி அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை பிணைப்பத்திரங்களை வைத்து ரூ.100 கோடி, ரூ.125 கோடி என கடன்பெரும் அளவிற்கும், மதுபான விற்பனை வரி மூலம்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என நீதிமன்றத்தின் பிரமாண பத்திரத்தில் உறுதிகூறும் நிலையில் உள்ளது.
கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமலும், பல அரசு பொது நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமலும் உள்ள நிலையில், புதுச்சேரி மாநில மக்களின் நலன்கருதியும் அரசின் நிதி நிலையையும் கருத்தில் கொண்டும் அமைச்சர்களின் எரிபொருள் செலவினம் மற்றும் பிற அனாவசிய செலவினங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.