பாலக்காடு: அட்டப்பாடி ஆதிவாசி கொலை வழக்கில், 12 குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்து மண்ணார்க்காடு பழங்குடியினர் பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது, உணவு பொருட்களை திருடியதாகக் கூறி ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 2018 பிப்., 22ம் தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, 16 பேரை போலீசார் கைது செய்தனர். நிபந்தனைகளுடன் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த இவ்வழக்கு மண்ணார்க்காடு எஸ்.சி.,/எஸ்.டி., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றவாளிகள் சாட்சியங்களை அழித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் வாதிட்டத்தை அடுத்து, குற்றவாளிகளில், 12 பேரின் ஜாமினை ரத்து செய்ததோடு, சிலரை ‘ரிமாண்ட்’ செய்யவும் உத்தரவிடப்பட்டது.
அரசு தரப்பு வக்கீல் ராஜேஷ் மேனன் கூறியதாவது: குற்றவாளிகளான மரய்க்கார், சம்சுதீன், அனீஷ், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், நஜீப், ஜைஜு மோன், அப்துல் கரீம், சஜீவ், பிஜு, முனீர் ஆகியோரின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலாவது குற்றவாளியான ஹுசைன், எட்டாவது குற்றவாளி உபைத், 13வது குற்றவாளி சதீஷ், 14வது குற்றவாளி ஹரீஷ் ஆகியோரின் ஜாமின் ரத்து செய்யப்படவில்லை.
நான்காவது குற்றவாளி அனீஷ், ஏழாம் குற்றவாளி சித்திக், 15வது குற்றவாளி பிஜு ஆகியோரை ‘ரிமாண்ட்’ செய்துள்ளனர். மற்றவர்களுக்கு ஜாமின் இல்லாது கைது ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் உயர் நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை மீறியதால், ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் சாட்சியங்களை அழிக்க முயன்ற ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement