ஓமலூர் அருகே இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்து சாதனை படைத்து வருகிறார். ஏழ்மையில் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்தால் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் உறுதியுடன் கூறுகிறார் அந்த மாற்றுத் திறனாளி. யார் அவர்? இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுக்காவில் கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் சித்த கவுண்டர், சேட்டம்மா தம்பதிகளுக்கு ஐந்து ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உள்ளனர். இதில், ஆறாவதாக பிறந்தவர் 28 வயதான நேசமணி. இவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளியாவார்.
கஞ்சநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இலவச வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், ஆரம்ப காலம் முதலே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் இடத்தை பெற்றுள்ளார்.
குண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், 100 கிலோ பளு தூக்குதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று வெற்றிகளை குவித்துள்ளார். தொடர்ந்து வீல் சேர் ரன்னிங் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், அம்பு விடுதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.
முறையாக பயிற்சி பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாததால், தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளார் நேசமணி. மேலும், பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், சுய தொழில் செய்வதற்கான கடனை கொடுக்க வங்கிகள் மறுப்பதாகவும் கூறுகிறார். அதனால், வீட்டருகே ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவிகள் செய்தால், நன்கு பயிற்சி எடுத்து, பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்வேன் என்று உறுதியுடன் கூறுகிறார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்தி, விளையாட்டு பயிற்சி வசதிகளை செய்து கொடுத்தால், பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பல தங்கங்களை வெல்லும் என்றும் உறுதியாகக் கூறுகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM