டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனை முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ, மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து இருந்தது.
இந்நிலையில் இன்று சிபிஐ சார்பில் டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 பேரும் வெளிநாடுகள் உள்ளிட்டவற்றிற்கு செல்ல இயலாத வகையில் தடை உத்தரவும் இதனால் ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, ”விலைவாசி ஏற்றம் வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் தலைவரை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி யாருக்கு எதிராக சிபிஐ பயன்படுத்தலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு பொதுமக்கள் இவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பார்கள்” என கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ‘காலை எழுந்ததும் சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கிறது மத்திய அரசு’- அரவிந்த் கெஜ்ரிவால்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM