சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகளில் முடிவெடுத்து, ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய நேரடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு முதல்வருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்பதை மாற்றி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தற்போது அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கும் வகையில் ‘பே மேட்ரிக்ஸ்’ உருவாக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதை காரணம் காட்டி, ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதை ஏற்க கூடாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் எனும் நடைமுறையே தொடர வேண்டும்.
போக்குவரத்து கழகத்தில் ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை சுமார் ரூ.1,200 கோடியை வழங்குவதோடு, கடந்த 2020 மே மாதத்துக்கு பிறகு காலமானவர்கள், விருப்ப ஓய்வில் சென்றவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுகால பலன்களையும் வழங்க வேண்டும்.
ஒப்பந்த நிலுவைத் தொகை குறித்து பேசி அதை இறுதிசெய்வதுடன், அதில் இறுதி செய்யப்படாத பேட்டா, இன்சென்டிவ் போன்ற கோரிக்கைகளை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் பேசி முடிக்கும் வகையில் ஒப்பந்த சரத்து உருவாக்க வேண்டும்.
எனவே, இப்பிரச்சினைகளில் முடிவு எடுக்கப்பட்டு, ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய தாங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.