ஜெய்பூர்: ”நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றிருக்கிறோம் என்றும், பசு வதையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் கொலை செய்யுங்கள்” என்றும் ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 2017- ஆம் ஆண்டு ராம்கர் என்ற பகுதியில் இறைச்சிக்காக பசுவை கடத்தி செல்வதாக பெஹ்லு கான் என்ற 55-வயது நபர் பெஹ்ரார் என்ற இடத்தில் ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில், அடுத்த ஆண்டே லல்வாண்டி கிராமத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசு பாதுகாவலர்கள் என்று கூறி தாக்குதல்
அதாவது 2018-ஆம் ஆண்டு ரக்பர் கான் என்பவரும் மாட்டிறைச்சிக்காக பசுவை கொண்டு செல்வதாக குற்றம் சாட்டி அடித்துக் கொல்லப்பட்டார். அடித்துக்கொல்லப்பட்ட இருவருமே அண்டை மாநிலமான ஹரியானாவை சேர்ந்தவர்கள். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பசுக்களை வாகனங்களில் கொண்டு சென்ற இருவரையும் பசு பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்ட கும்பல் இருவரையும் கொடூரமாக தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேல் முறையீடு
பெஹ்லு கான் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் 2019- ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ரக்பர் கான் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு இன்னும் உள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
5 பேரை கொன்றுள்ளோம்
இந்த நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கியான் தேவ் அஹூஜா, ”பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுங்கள்” என்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கியான் தேவ் அஹூஜா மேலும் கூறுகையில், ”இதுவரை நாங்கள் ஐந்து பேரை கொலை செய்து இருக்கிறோம். எந்த தயக்கமும் இன்றி சுதந்திரமாக கொலை செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். அவர்களுக்கு ஜாமீனையும் விடுதலையும் நாங்கள் பெற்று தருகிறோம்” என்று பேசுகிறார்.
வழக்குப்பதிவு
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், கியான் தேவ் அஹூஜாவுக்கு எதிராக153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கியான் தேவ் அஹுஜா ஏற்கனவே இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது பெஹ்லுகான் மற்றும் ரக்பர் கான் ஆகிய இருவரும் அடித்துக்கொல்லப்பட்டதை மேற்கோள் காட்டி நேரடியாக கியான் தேவ் அஹுஜா பேசியிருப்பது ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கும்பல் கொலைகளும் கியான் தேவ் அஹுஜாவின் எம்.எல்.ஏவாக இருந்த ரம்கர் தொகுதியில் தான் நடந்தது குறிப்பிடத்தக்கது.