`ரஷ்ய அதிபர் புதினின் மூளை’ என்று அழைக்கப்படும், ரஷ்ய சித்தாந்தவாதி அலெக்சாடர் டுகினின்(Alexader Dugin) மகள், கார் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் இன்று தெரிவித்திருக்கின்றனர்.
அதிபர் புதினுக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுபவரும், அவரின் ராணுவ ஆலோசகராகவும் இருப்பவர் அலெக்சாடர் டுகின். ரஷ்ய மொழி பேசும் பிரதேசங்களை, ரஷ்யாவுடன் ஒன்றிணைக்க நீண்ட காலமாக போராடி வந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். 2014-ல் ரஷ்யா, கிரிமியாவை இணைத்த பிறகு, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை பட்டியலில் இவரும் சேர்க்கப்பட்டார்.
டாரியா டுகினா(Daria Dugina) இவரின் மகளாவார். இந்த நிலையில் டாரியா, மாஸ்கோவுக்கு வெளியே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையொன்றில் தன்னுடைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் விபத்தில் சிக்கினார். இதில், டாரியா டுகினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என ரஷ்யாவின் விசாரணைக் குழு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
டாரியா டுகினா கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காரணம் என்னவென்று முழுமையாக தெரிவில்லையென்றாலும், அவரின் தந்தைக்கு வைக்கப்பட்ட இலக்கில் இவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக அந்த காரில் அலெக்சாடர் தான் செல்வதாக இருந்தது. இறுதியில் தான் மகள் காரை கேட்டு எடுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. உக்ரைனிலிருந்து பிரிந்துசென்ற பிராந்தியத்தின் தலைவர் ஒருவர், இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் அதிகாரிகள் தான் காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.