’அடிப்படை ஆதார விலை..புதிய மின்சார திட்டம்’.. டெல்லியில் விவசாயிகள் 72 மணி நேர போராட்டம்!

தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியிருக்கும் நிலையில், டெல்லியின் எல்லைகளில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் 100 நாட்களை கடந்து ஆயிரக்கணக்கான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது வேளாண் விளைப்பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். அதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கி உள்ளன.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் 72 மணி நேர போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்த நிலையில் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று காலை முதல் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஏராளமான விவசாயிகள் நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்து அங்குள்ள குருத்துவாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இன்று காலை ஜந்தர் மந்திரில் ஒன்று கூடி போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.
என்ன ஆனது ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்.....!!!!
மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூரில் இன்று காலை ஒன்று கூடி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விவசாயிகளை அதிரடியாக கைது செய்து பேருந்துகள் மூலம் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இன்றைய தினம் டெல்லி ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் எல்லைகளில் ஒன்று கூடிய விவசாயிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் ஏராளமான ஒன்று கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
image
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்க தலைவர் பல்தேவ் சிங் சிர்ஸா கூறுகையில், அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றார். மேலும் இங்கு போராடத் திரண்டிருப்பவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள். கடந்த நவம்பரில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன் பின்னர் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்படும். அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படியேதும் இதுவரை நடைபெறவில்லை. அந்த அமைப்பே கேலிக்கூத்தாக இருக்கிறது.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றனர். அதுவும் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு நீதி கோரி வருகிறோம். அதுவும் நிலைநாட்டப் படவில்லை. தொடர்ந்து பேசியவர் எம்.எஸ்.பி. என்ற விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை எம்.எஸ்.ஸ்வாமிநாதன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
image
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைகளான நொய்டா உள்ளிட்டவைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தங்களுடைய போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த இருப்பதாகவும் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-விக்னேஷ் முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.