மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்துகொண்டார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முற்றுகையிட்டு போராட்டம்
அண்ணா பிறந்தநாள் விழா வருவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை சாதி ,மத ,பேதம் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துகொள்கிறேன். மேலும் இந்த கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 10-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம்.
டெல்லி அரசுக்கு பிடிக்கவில்லை
முதலமைச்சரின் அதிகாரத்தை குறைக்க கூடிய வேலைகளை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கிறது. தமிழக ஆளுநர் தேவையற்ற விஷயங்களை பேசி வருகிறார். ஆளுநர் மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பில் வெளியில் பேச முடியாத அளவிற்கு என்ன அரசியல் பேசியிருப்பார்கள்… அரசியல் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும்.. திராவிட இயக்கங்களின் கொள்கைகள் டெல்லி அரசுக்கு பிடிக்கவில்லை.. அதனால் தான் ஆளுநரை வைத்து சிதைக்க நினைக்கிறார்கள்….
வேண்டப்பட்டவர்களுக்காகவே ஏலம்
திராவிட இயக்கங்கள் தான் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு தமிழ்நாட்டை ஆளும்… திமுக அரசிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்களை ஆளுநர் செய்தால் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி இந்த அரசை பாதுகாக்க கூடிய வேலைகளை செய்வோம். என்று கூறினார். தொடர்ந்து ‘5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு நிறுவனமான bsnl ஏன் பங்கேற்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த தமீமுன் அன்சாரி, ”ஒன்றிய அரசின் வேண்டப்பட்டவர்களுக்கு எதுவாகவே இந்த ஏலம் நடைபெற்று இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
அதிமுகவை பலவீனப்படுத்த
தொடர்ந்து பேசிய தமீமுன் அன்சாரி, தற்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து வருவதாக கூறினார். இது குறித்து அவர் பேசுகையில், ”பாஜக அரசு அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து வருகிறது. கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறது. முதலில் அதிமுகவை பலவீனப்படுத்தி சீரழித்து விட்டு பின்பு திமுகவை சீரழிக்க பாஜக நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.