அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை: கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து இருந்தார்.
பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை உற்சாகப்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்தனர்.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வருகிறது.
இந்த விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களை இரு தரப்பும் இன்று எடுத்து கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆர்வமோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.