உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் என என்னதான் பாஜக வடக்கே கோலோச்சி இருந்தாலும், அதனால் தெற்கில் இன்னும் தடம் பதிக்க முடியவில்லை. தேர்தல் அரசியலில் அந்த கட்சிக்கு இதுவொரு கௌரவ பிரச்னையாகவே இருந்து வருகிறது.
மோடி இருக்கும்போதே தெற்கில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருந்தால் எப்படி என்று எண்ணிய அமித் ஷா தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தென் மாநிலங்களில் , 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கனியை பறிப்பதற்கான பணிகளில் இப்போதே இறங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை பாஜகலின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்தை ஏதாவதொரு விதத்தில் பயன்படுத்தி கொள்ளும் முயற்சியில் அக்கட்சி இறங்கி உள்ளதாகவே தெரிிகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான ரஜினியின் சமீபத்திய சந்திப்பும் இதன் பின்னணியில்தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ரஜினி என்றால், ஆந்திரா, தெலங்கானாவுக்கு ஜூனியர் என்டிஆரோ என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அங்கொரு தரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில தலைநகரான் ஹைதராபாத்துக்கு நேற்று வருகை தந்திருந்த பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுடன் இரவு விருந்து அருந்தி உள்ளார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ஜூனியர் எண்டிஆர்.
இவர் நடித்து அண்மையில் வெளியாகி வசூலை குவித்த RRR திரைப்படத்தை பார்த்து அமித் ஷா பயங்கரமாக இம்ப்ரஸ் ஆகிவிட்டார். அதன் காரணமாகதான் ஹைதராபாத் வந்திருக்கும்போது அவரை நேரில் அழைத்து விருந்து கொடுத்து பாராட்டி உள்ளார் என்றொரு தகவலை டோலிவுட்டில் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஆனால் அமித் ஷா – ஜூனியர் என்டிஆர் சந்திப்பின் பின்னணியில் அரசியலும் இருக்கலாம் என்ற கருத்தும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நிலவி வருகிறது. இதற்கு காரணம் ஆந்திரா, தெலங்கானா என ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படாததற்கு முன்பு அங்கு ஜூனியர் என்டிஆரின் தாத்தாவும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சி (TDP) தான் பெரும்பாலும் ஆட்சி், அதிகாரத்தில் இருந்து வந்தது. என்டிஆரின் மாப்பிள்ளையான சந்திரபாபு நாயுடு காலம் வரை தெலுங்கு தேசம்தான் ஆந்திராவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் இன்று நிலைமையே வேறு. ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அசுர பலத்துடன் ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக கலக்கி கொண்டிருக்க TDP வெறும் 23 எம்எல்ஏக்களுடன் பெயரவில் மட்டும் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. தெலங்கானாவில் இதுகூட கிடையாது. அங்கு சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடந்து கொண்டிருக்க, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இப்படி மொத்தத்தில் இவ்விரு மாநிலங்களிலும் தெலுங்கு தேசம் கட்சிக்கோ, பாஜகவுக்கோ இடமில்லாமல் இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில்தான் தெலங்கானா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டும், ஆந்திர மாநில சட்டசபைக்கு 2024 ஆம் ஆண்டும் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாயுடுவின் இந்த முடிவின் பின்னணியில்தான், ஜூனியர் என்டிஆர் – அமித் ஷா சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது இதுநாள்வரை தேர்தலின்போது மட்டும் TDPக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவரும் ஜூனியர் என்டிஆரை, தீவிர அரசியலில் இறங்கும் முயற்சியாகவே அவருடனான அமித் ஷாவின் சந்திப்பு பார்க்கப்படுகிறது.