சென்னை: தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கு, தமிழ் தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தமிழ் மொழி தகுதித் தேர்வை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிக் குழுமத்தில் (எஸ்சிஇஆர்டி) உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில், இந்த புதியநடைமுறை அமல் படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘எஸ்சிஇஆர்டி-ல் 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி, தமிழ் தகுதித் தேர்வில் மொத்தம் உள்ள 50 மதிப்பெண்ணுக்கு 20 மதிப்பெண் பெறவேண்டும். அப்போதுதான், பாடம் சார்ந்த முதன்மை விடைத்தாள் திருத்தப்படும்.
கணினி வழியில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு, விண்ணப்பப் பதிவு, வழிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தேர்வில்இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.