தானே: மகாராஷ்டிராவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸ் வேனில் அமர்ந்தபடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் ஜா (33). பிரபல ரவுடியான இவர் மீது தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பல வழக்குகள் இருப்பதால் சிறைக்கு சென்று வருவது ரோஷனுக்கு வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் உல்ஹாஸ் நகரில் தொழிலதிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரோஷன் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக ரோஷனை போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக் கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறையில் இருந்து ரோஷனை போலீஸார் வேனில் நேற்று அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அங்கு வந்த கார் ஒன்று வேனை வழிமறித்து நின்றது. பின்னர் அதில் இருந்து இறங்கிய 5 பேர் கேக்கை கையில் ஏந்தியபடி ரோஷனை வாழ்த்தி பிறந்தநாள் பாடலை பாடினர். தொடர்ந்து, ரோஷன் கையில் அவர்கள் கத்தியை கொடுக்க, அதனை எடுத்து போலீஸ் வேனின் ஜன்னல் வழியாக அவர் கேக்கை வெட்டி தனது கூட்டாளிகளுக்கு ஊட்டிவிட்டார். இவை அனைத்தையும் வேனில் இருந்த போலீஸார் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
மேலும், இதனை வீடியோவாகவும் எடுத்த அந்த ரவுடிகள், சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிக்கு போலீஸார் கொடுக்கும் மரியாதையை, பொதுமக்களுக்கு ஏன் கொடுப்பதில்லை நெட்டீசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டும், மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள், காவல் உயரதிகாரிகளுக்கும் ‘டேக்’ செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி சம்பவம்
முன்னதாக, டெல்லியில் உள்ள ஒரு சிறையில் ரவுடி ஒருவரின் பிறந்தநாளை ஒட்டி பிரியாணி, மதுபானங்களுடன் தடபுடலாக விருந்து நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த சிறைத்துறை அதிகாரி உட்பட 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.