இஸ்லாமபாத்: நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். அப்போது அவரது ஆட்சியில் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று கூறிய கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றது.
இம்ரான் கானுக்கு எதிராக
இதனால், பெரும்பான்மையை இழந்த இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக புதிய அரசு அமைத்தன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக பதவியேற்றார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இம்ரான் கான் பாகிஸ்தானில் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாகிஸ்தானை விமர்சிக்கும் அதேவேளையில், இந்தியாவை புகழ்ந்தும் இம்ரான் கான் பேசிவருவது அந்நாட்டு அரசியலில் பரபரபைக் கிளப்பி வருகிறது.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதி அளித்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு பாகிஸ்தானில் நிலவி வருகிறது.
போராட்டத்துக்கு அழைப்பு
இத்தகைய பரபரப்பான சூழலில், தெஹிரீக் இ இன்சாப் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இம்ரான் கான் கைது ஆவதற்கு சாத்தியம் இருக்கும் சூழலில் அதற்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பிடிஐ கட்சியின் துணைத்தலைவர் ஷா முகம்மது குரோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ”இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
ஊடக ஒழுங்கு முறை ஆணையம் தடை
இம்ரான் கானின் இல்லத்திற்கு செல்லும் வழியில் சாலைதடுப்புகளை வைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் சம்பந்தம் இல்லாத நபர்கள் செல்வதை தடுத்து நிறுத்தி வருகின்றனர். முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று அந்நாட்டின் மின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.