இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை : நீதிமன்றம் அதிரடி
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனந்தம் படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தனது திருப்பதி பிரதர்ஸ் மூலம் படங்களும் தயாரித்து வந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான தி வாரியர் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.
‛‛எண்ணி ஏழு நாள்'' என்ற படத்திற்காக பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் கடன் வாங்கி உள்ளார். இந்நிறுவனத்திற்கு ரூ.1.03 கோடி தர வேண்டும். இதற்காக அந்த நிறுவனத்திற்கு காசோலை வழங்கி உள்ளார். அது பணமின்றி திரும்பி வந்தது. இது தொடர்பாக லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.