சாயல்குடி : கொரோனா பாதிப்பால் முடங்கியதால் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பனை ஓலை கைவினை பொருட்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரத் தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமரம் சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் தொடங்கி திருப்புல்லாணி, உச்சிப்புளி, ராமேஸ்வரம், தொண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது.
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பனை ஓலை மூலம் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. பல வண்ணங்களில் பனை ஓலையிலான கலர்புல் மாலைகள், வீடு, அலுவலக அலங்கார தோரணங்கள், பெண்களை கவரக்கூடிய தோடு, வளையல், கழுத்து அணிகலன்கள், ஹேண்ட் பேக், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுகிலுப்பை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், பனை ஓலை பெட்டிகள், வண்ண விசிறி போன்றவை தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்ற இந்த பொருட்கள் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, திருவாடானை, நயினார்கோவில் மற்றும் ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட கோயில் கடைகள், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இவற்றுக்கு அங்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது. இதுதவிர அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகால கொரோனா பாதிப்பு தடையால், உள்நாடு சரக்கு போக்குவரத்து, வெளிநாடு விமான போக்குவரத்து முடங்கியது.
இதனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு செல்லாமல் தேங்கமடைந்தன. தற்போது வழக்கமான நிலைக்கு திரும்பியதால் பனை ஓலை பொருள் தயாரிப்பு பணி மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதிய பொருட்களுடன், தேக்கமான பொருட்களும் விற்பனைக்கு செல்வதால் மகளிர் குழுக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து மொங்கான்வலசை, மொத்திவலசை மகளிர் குழுவினர் கூறுகையில், ‘‘பனை ஓலை, நார்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களுக்கு உள்மாவட்டம், தமிழ்நாட்டின் கோயில், சுற்றுலா நகரங்கள், பெரும் நகரங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மகளிர் குழு ஒன்றிற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வருமானம் வந்ததால் மகளிர் குழுவை சார்ந்த பெண்களுக்கு போதிய வருவாய் கிடைத்தது.
கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததால் கைவினை பொருட்களை வாங்கி செல்வதற்கு மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்கள் வருகின்றனர். இதனால் பனை ஓலை, நார் வகை பொருட்கள் தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது’’ என்றனர்.
கடலாடியைச் சேர்ந்த பெட்டி தயாரிக்கும் வசந்தா, பாண்டியம்மாள் கூறுகையில், ‘‘3 தலைமுறையாக இந்த தொழில் செய்து வருகிறோம். தற்போது ஓலை, மட்டை, கலர் சாயம் விலை அதிகரித்து விட்டது. 20 கிலோ பொருள் பெட்டி ரூ.500க்கு விற்கப்படுகிறது. ஆனால் செலவு ரூ.300ம் 2 நாட்களும் ஆகிறது. இது கட்டுபடியாகும் விலையில் இல்லை. எனவே வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.