எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தூங்காநகரம் என அழைக்கப்படும் மதுரை மாநகரில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது.
100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 55,500 தெருவிளக்குகள் உள்ளன.
கடந்த காலத்தில் தெரு விளக்குகள் அனைத்தும் டியூப் லைட், சிஎஃப்எல் மற்றும் சோடியம் விளக்குகளாக மட்டுமே இருந்தன. இந்த விளக்குகளை எரிய வைப்பதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டதால் தெருவிளக்குகளுக்காக மட்டும் மாநகராட்சி நிர்வாகம், மின்கட்டணமாக 1 கோடி வரை செலுத்தி வந்தது. இந்நிலையில் நிதியிழப்பை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை குறைக்க ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் 30 கோடியில் 80 சதவீதம் தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றியது. இதனால் மின்கட்டணம் 50 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்கு மின்கட்டணமாக 50 லட்சம் முதல் 55 லட்சம் வரை மட்டுமே செலுத்தி வருகிறது.
கடந்த காலங்களில் தெருவிளக்குகளை பராமரிக்க மாநகராட்சியின் நேரடி தனிப்பிரிவு செயல்பட்டு வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் எல்இடி பல்புகள் அமைக்கப்பட்ட பின்னர் தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் விட்டது.
முன்னதாக விடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 4 மாதத்திற்கு முன்பே நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் புதிய ஒப்பந்தம் விடப்படாததால் தெருவிளக்குகளை பராமரிப்பு முற்றிலும் முடங்கியுள்ளது. ஆட்சி மாற்றம், புதிய மாநகராட்சி நிர்வாகம் என பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒப்பந்தம் விடுவதிலும் ஒப்பந்தம் எடுப்பதிலும் பல்வேறு குளறுபடிகளும் சிக்கலும் எழுந்துள்ளதால் ஒப்பந்தம் விடப்படாமல் உள்ளது.
தற்பொழுது மாநகர் முழுவதும் 50 சதவீததிற்கும் அதிகளவில் தெரு விளக்குகள் பழுதாகியுள்ளதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் தூங்கா நகரம் தற்பொழுது இருளில் மூழ்கியுள்ளது.
மாநகரின் பெரும்பாலான பிரதான சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் தெருக்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுவது, சாலையின் குறுக்கே நாய் மாடு உள்ளிட்டவைகள் வருவது தெரியாமல் மோதி விபத்தில் சிக்கும் நிலையை எதிர்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள்.
மேலும் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது குறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தாலும் புகாரை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டும் மக்கள், ஒப்பந்தம் விடுவதில் தாமதல் ஏற்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் முன்பை போலவே நேரடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில், தெருக்களில் விளக்குகள் எரியாமல் உள்ளதால் இரவு நேரத்தில் வெளியே நடமாட முடியாத நிலையில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக கூறும் பெண்கள் பட்ட பகலிலேயே செயின் பறிப்பு உள்ளிட்ட அசம்பாவிதம் நடைபெறும் நிலையில் இரவு நேரத்தில் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அவசர தேவைக்கு கூட பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலையில் வீட்டை விட்டு அருகில் அவசர தேவைக்கும், மருத்துவ தேவைக்கோ அல்லது கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட வீட்டில் உள்ள ஆண்களின் துணை இல்லாமல் செல்ல முடிவதில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், தொடர்ந்து பல மாதங்களாக தெரு விளக்குகள் பழுதகியுள்ளதால் மதுரை மக்கள் இரவு நேரத்தில் விபத்து, குற்றசம்பவம் போன்ற அசம்பாவிதம் ஏற்படுமோ என்னும் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே மதுரை மாநகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோனிடம் கேட்டபோது, டெண்டர் விடுவதற்கான செயல்கள் இறுதி கட்டத்தில் உள்ளதாவும் விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு தெரு விளக்குகள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
-லட்சுமணன், கணேஷ்குமார், வேங்கையன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM