டெல்லியில் மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக பாஜக-ஆத்மி இடையே மோதல்போக்கு நிலவிவருகிறது. இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஆம் ஆத்மியை முடக்கவே, சி.பி.ஐ மூலம் பா.ஜ.க இத்தகைய செயல்களை முடுக்கிவிட்டிருப்பதாக அந்தக் கட்சி கூறிவருகிறது.
இதற்கிடையில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு நாள்கள் பயணமாக இன்று குஜராத்தை வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட ஆம் ஆத்மி தலைவர்களுடன் அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கெஜ்ரிவால், “தரமான அரசுப் பள்ளிகளை உருவாக்கிய ஒருவர், இன்று சி.பி.ஐ-யால் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதனால் நாட்டிலுள்ள அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் இப்படிப்பட்ட ஒருவருக்கு, அவரின் கல்விச் சேவைக்காகக் கலந்தாலோசிக்கப்பட்டு, பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்படலாம். யாருக்குத் தெரியும் நான்கூட கைது செய்யப்படலாம். இவையனைத்துமே குஜராத் தேர்தலுக்காக செய்யப்படுகிறது” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மணீஷ் சிசோடியா, “எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில் ஒன்று, என்மீதான அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளும் மூடப்படும் என்பது. மற்றொன்று, நான் ஆம் ஆத்மியை விட்டு விலகி பா.ஜ.க-வில் சேர்வது. டெல்லியில் பா.ஜ.க-வுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லாததால் அவர்கள்(பா.ஜ.க) என்னை முதல்வர் வேட்பாளராக்குவார்கள். ஆனால், நான் நேர்மையானவன் என்பதால் கெஜ்ரிவாலுடன் இருக்கிறேன். இதில் என்மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை” என்றார்.