எல்ஜிபிடி உரிமைகள்: தன்பாலின சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்தது சிங்கப்பூர்

எல்ஜிபிடி

Getty Images

எல்ஜிபிடி

ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது.

தன்பாலின உறவு தொடர்பான தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள தன்பாலின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், “இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளனர்.

பழமைவாத நடைமுறைகளுக்காக அறியப்படும் நாடு சிங்கப்பூர். ஆனால், காலணியாதிக்க சட்டம் 377ஏ-ஐ நீக்க வேண்டும் என, சமீப ஆண்டுகளாக பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து, எல்ஜிபிடி சமூகத்தினரின் உரிமைகளை நோக்கிச் செல்லும் ஆசிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது.

ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவை தடை செய்யும் சட்டப்பிரிவு 377 ஏ-ஐ தடை செய்யாமல் இருப்பதே அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியாக சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்திருந்தது.

ஆனால், சிங்கப்பூர் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இச்சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், “இந்நடவடிக்கை சரியானது என நான் நம்புகிறேன். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்” என தெரிவித்திருந்தார்.

“தன்பாலின சேர்க்கையாளர்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்த அவர், 377ஏ-ஐ ரத்து செய்வது சிங்கப்பூரின் சட்டங்களை “தற்போதைய சமூக விதிகளுக்கு ஏற்ப மாற்றும். மேலும், தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு இது துயர்நீக்குவதாக அமையும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

“இறுதியாக நாங்கள் இதனை சாதித்துவிட்டோம். இந்த பாரபட்சமான, பழமையான சட்டம் நீக்கப்படுகிறது என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நிறைவேற நீண்ட காலமாகிவிட்டது போன்ற உணர்வு இருக்கிறது. எனினும், இது நடக்க வேண்டும். இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்,” என தன்பாலின செயற்பாட்டாளர் ஜான்சன் ஓங் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இது கடினப்பட்டு கிடைத்த வெற்றி, அச்சத்திற்கு எதிரான அன்பின் வெற்றி” என தெரிவித்துள்ள தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான குழுக்களின் கூட்டமைப்பு, இது முழு சமத்துவத்தை நோக்கிய முதல் படி என தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடி

Getty Images

எல்ஜிபிடி

ஆனால், சிங்கப்பூர் பிரதமர் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு குறித்த கவலைகளையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் செய்யப்படும் திருமணத்திற்கு சிறந்த சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கவும் அரசாங்கம் உறுதிசெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இது இரு ஆண்கள் திருமணம் செய்வது சட்டபூர்வமாவதை கடினமாக்கும்.

பலரும் குடும்பம் மற்றும் சமூக நெறிமுறைகளை பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ள நிலையில், சிங்கப்பூர் பாரம்பரிய சமூகமாகவே நீடிக்கும் என சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது “ஏமாற்றத்தை” அளிப்பதாக தெரிவித்துள்ள குயர் சமூக செயற்பாட்டாளர்கள், சமூகத்தில் பாகுபாட்டை மேலும் வேரூன்றவே இது வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ப்ரொடெக்ட் சிங்கப்பூர் என்ற பழமைவாத குழு, சட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பால் தாங்கள் “மிகுந்த ஏமாற்றத்திற்கு” உள்ளாகியிருப்பதாகவும் “விரிவான பாதுகாப்பு வழிமுறைகள்” குறித்த உத்தரவாதம் இன்றி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணம் குறித்த வரையறையை அரசியலமைப்பில் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், “குழந்தைகளிடையே தன்பாலின ஊக்கம்” குறித்த எல்ஜிபிடி தொடர்பான தடை செய்யப்பட்ட சட்டங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

எல்ஜிபிடி சமூகத்தினருக்கான பெருகும் ஆதரவு

பிரிட்டிஷ் காலணி ஆட்சியில் 377ஏ சட்டம் சிங்கப்பூருக்கு வந்தது. 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றபிறகும் அந்நாட்டில் இச்சட்டம் அமலில் இருந்துவந்தது.

இந்த சட்டம் ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை குற்றமாக்குகிறது என்றாலும், ஒட்டுமொத்த தன்பாலின சேர்க்கையையே இச்சட்டம் தடை செய்வதாக பார்க்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக இச்சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படாத நிலையில், LGBTQ சமூகத்தினருக்கான ஆதரவு சிங்கப்பூரில் அதிகரித்துவந்தது, இதுதொடர்பான இரவுநேர கிளப்புகளும் செயல்படத் தொடங்கின.

377ஏ-ஐ நீக்க வேண்டும் என, தன்பாலின செயற்பாட்டாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். தன்பாலின சேர்க்கையாளர்கள் மீதான சமூக கற்பிதங்களை நிலைக்கச் செய்யும் வகையில் இச்சட்டம் இருப்பதாகவும், பாகுபாட்டை தடை செய்யும் சிங்கப்பூரின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும், வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் ஈடுபாடு கொள்வதிலிருந்து தடை செய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, “தன்பாலின சேர்க்கையை ஊக்குவிப்பதாக” கூறப்படும் எந்தவொரு கருப்பொருளையும் ஒளிபரப்பு செய்வதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கடந்த காலத்தில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

பரந்த, பன்மைத்துவம் வாய்ந்த உலகளாவிய பொருளாதார மையமாக விளங்கும் சிங்கப்பூரின் பிம்பத்திலிருந்து வேறுபட்டதாக இச்சட்டம் உள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இச்சட்டம் திறமைகளை ஈர்ப்பதற்கான தங்கள் முயற்சிகளுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலானோர் 377ஏ சட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்தது. LGBTQ சமூகத்தினரின் உரிமைகள் தொடர்பான ஆதரவு பெருகுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தின.

எல்ஜிபிடி

Getty Images

எல்ஜிபிடி

அதேசமயத்தில் குயர் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பழமைவாதிகளில் பெரும்பாலானோர் மதம் சார்ந்த குழுக்களிலிருந்து வந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டுக்காக அணிதிரட்டினர்.

சிங்கப்பூரில் போராட்டங்கள் மற்றும் அரசியல் கூடுகைகள் தீவிரமாக கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குயர் சமூக செயற்பாட்டாளர்கள் பெரியளவிலான சமூக பேரணியை ‘பிங்க் டாட்’ என்ற பெயரில் நடத்திவருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கிலானோர் பங்கேற்பர்.

அதேவேளை, பாரம்பரிய நடைமுறைகளை பாதுகாக்க அழைப்புவிடுத்து பல்வேறு சமூக ஊடக பிரசாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பழமைவாதிகள் நடத்தி வந்தனர். மேலும், தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண்களை மாற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறைகளில் சில தேவாலயங்கள் ஈடுபட்டன.

இரு தரப்பினரும் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என, சிங்கப்பூர் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய தின உரையில் சிங்கப்பூர் பிரதமர், “அனைத்து குழுக்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுமட்டும்தான் தேசமாக நாம் ஒன்றிணைந்து முன்செல்வதற்கான ஒரே வழி” என தெரிவித்தார்.

எல்ஜிபிடி

Getty Images

எல்ஜிபிடி

பிரிட்டிசாரின் பாரம்பரியம்

377-சட்டத்தின் ஒரு வடிவம் நீடிக்கும், காலணி ஆட்சியில் இருந்த ஒரே நாடு சிங்கப்பூர் மட்டும் அல்ல. இந்த சட்டம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஒசேனியா உள்ளிட்ட பல பகுதிகளில் நீடிக்கிறது.

19ம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரிட்டிஷ் காலணி ஆட்சியின்போது இது அறிமுகப்படுத்தப்பட்டது, இது “எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிராக உடலுறவு” கொள்வதை தடை செய்தது.

பிரிட்டிஷார் குற்றவியல் சட்ட விதிகளை வகுக்க இந்திய தண்டனைச் சட்டம் – ஐபிசியை அடிப்படையாக பயன்படுத்தியதால், இந்தியாவுக்கு வெளியே பிரிட்டிசார் கட்டுப்படுத்திய மற்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இச்சட்டம் பரவியது. கென்யா, மலேசியா, மியான்மர் உள்ளிட்ட பிரிட்டிசார் காலணி ஆட்சியில் இருந்த நாடுகளில் 377- சட்டத்தின் சில வடிவம் நீடிக்கிறது.

2018ஆம் ஆண்டில் 377-ஐ ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியது. இது மற்ற காலணியாதிக்க நாடுகளும் பின்பற்றும் என்ற நம்பிக்கையை செயற்பாட்டாளர்களிடையே ஏற்படுத்தியது.

சமீப ஆண்டுகளாக ஆசியாவின் சில பகுதிகளில் ஆண்களுக்கு இடையேயான தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதனை 2019-ல் செய்த முதல் நாடாக தைவான் உள்ளது. தன்பாலின சேர்க்கையை சட்டபூர்வமாக்கும் வரைவு மசோதாவுக்கு கடந்த ஜூன் மாதம் தாய்லாந்து ஒப்புதல் அளித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.