(“டெல்லியில் என்னை ஒதுக்கினார்கள் – சிரஞ்சீவி என்ற தலைப்பில் 27.09.1992 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து…)
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் மொகுலுதுரு. இந்த ஊரைச் சேர்ந்த சிவசங்கர் வரப்பிரசாத் அப்போதுதான் (1977) பி.காம், பாஸ் செய்திருந்தார். அரசாங்கத்தின் எக்சைஸ் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிவசங்கரின் அப்பா வெங்கட்ராவுக்குத் தன் மகன் ஒரு பெரிய ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை!
ஆனால், சிவசங்கர் “நான் சினிமாவில் நடிக்க வேண்டும். அதற்கான பயிற்சி பெற பூனா திரைப்படக் கல்லூரியில் சேரப்போகிறேன்…” என்று சொன்னபோது, வெங்கட்ராவின் கோபம் வார்த்தைகளாகச் சீறி வந்தன. “சினிமாவும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம் 1964-ம் ஆண்டு நானே ரெண்டு படத்தில் நடிச்சிருக்கேன். அந்த அனுபவத்தில் சொல்றேன். சினிமா வேண்டாம்!” என்று கண்டிப்போடு சொல்லி, ‘காஸ்ட் அக்கௌண்டன்ஸி’ படிக்க மகனைச் சென்னைக்கு ரயிலேற்றினார் வெங்கட்ராவ்.
சினிமாவுலகின் மெக்காவான கோடம்பாக்கத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டும், சினிமா ஆசைகளை நெஞ்சில் தேக்கிக் கொண்டும் சிவசங்கரால் படிப்பிலே கவனம் செலுத்த முடியவில்லை. அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்!
விஷயம் கேள்விப்பட்டு விசாரித்த அப்பாவிடம், “எனக்கு ரெண்டே ரெண்டு வருஷம் டைம் கொடுங்கள்! நான் யார் என்று நிரூபிக்கிறேன்…” என்று சிவசங்கர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட… அப்பாவால் ஒன்றும் செய்யவில்லை.
அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது சிவசங்கருக்குச் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. ‘உனக்கு வில்லன் லுக்தான் இருக்கிறது.!
உன்னால் எல்லாம் ஹீரோவாக நடிக்க முடியாது’ என்று சிவசங்கரைப் பார்த்து தயாரிப்பாளர்கள் கூறினார்கள்!
அப்போதுதான் ‘கைதி’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சிவசங்கருக்குக் கிடைத்தது! 1983-ல் படம் வெளியானது. ஹீரோவாக நடித்திருந்த சிவசங்கரின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ஒவ்வொன்றுக்கும் தியேட்டரில் கரவொலி எழுந்தது. படம் சூப்பர் ஹிட்! ‘டப்’ செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியான ‘கைதி’ நூறு நாட்கள் ஓடியது. ‘கைதி’யின் வெற்றி சிவசங்கர் என்கிற சிரஞ்சீவியை சினிமா உலகத்தில் விஸ்வரூபம் எடுக்க வைத்தது! படவுலகில் மளமளவென உயர்ந்து தற்போது 120 படங்களில் நடித்து முடித்திருக்கும் சிரஞ்சீவிக்கு இன்று ஆந்திரா முழுவதும் ஆறாயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. சிரஞ்சீவி ஒரு படத்தில் நடிக்க ரஜினியை விடவும், அமிதாப்பை விடவும் அதிகமான சம்பளம் வாங்குவதாகக் கூறுகிறார்கள்! அதாவது, ஒன்றே கால் கோடி ரூபாய் (நிஜமாவா..?!)
ஹீரோ சிரஞ்சீவியின் மனைவி சுரேகா. இவரது சகோதரர் அல்லு அரவிந்த்தான் சிரஞ்சீவியின் ஆலோசகர், மானேஜர், விமரிசகர் எல்லாம். ஷூட்டிங் இல்லாத விடுமுறை நாள் என்றால், தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகள் என்று ஏகப்பட்ட குழந்தைகளோடு சேர்ந்துகொண்டு சிரஞ்சீவி தலைகாணியைத் தூக்கி அடித்துக் கொண்டு குழந்தையோடு குழந்தையாக விளையாடுவாராம்!
பணம், புகழ், சந்தோஷம் என்று எல்லாம் பெற்றிருந்தாலும் சிரஞ்சீவியின் மனதிலும் ஒரு ஆழமான வடு இல்லாமல் இல்லை!
பன்னிரண்டாவது சர்வதேசத் திரைப் பட விழா டெல்லியில் நடந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது… அந்த விழாவில், சிரஞ்சீவி நடித்த ‘ருத்ரவீணா’ (தமிழில் – ‘உன்னால் முடியும் தம்பி’) படமும் திரையிடப்படவிருந்தது. எனவே, சிரஞ்சீவியும் இவ்விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தார். விழாவை நடத்தியவர்கள் மேடையில் துணை நடிகரைப் போல சிரஞ்சீவியை நடத்திவிட்டு, இந்தி நடிகர்களுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தார்கள்! அது மட்டுமல்ல… மேடையில் நின்றிருந்த சிரஞ்சீவியைப் பார்த்து, “ஒதுங்கி ஓரமா நில்… இல்லே, மேடையை விட்டுக் கீழே இறங்கு..” என்று விழா அமைப்பாளர்கள் சொல்ல… சிரஞ்சீவியின் கண்கள் கோபத்தால் சிவந்தன! ‘அந்த சர்வதேச விழா மேடையில் கலாட்டா செய்தால், அது நம் நாட்டுக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும் எனக் கோப உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிரஞ்சீவி டெல்லியை விட்டு உடனே கிளம்பி வந்துவிட்டார். வரும் போதே, ‘இந்தி நடிகர்களுக்கு நான் சிறிதும் குறைந்தவனில்லை’ என்று நிரூபித்துக் காட்டுவது எனச் சபதமும் எடுத்துக் கொண்டார். டெல்லியிலிருந்து வந்த அதே வேகத்தில், ‘பிரத்திபந்த்’ என்ற இந்திப் படத்தின் வேலைகளைத் தொடங்கினார்.
தெலுங்கில் ‘அங்குசம்’ என்ற பெயரில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட அந்தப் படம், இந்தியிலும் ஹிட்! இதைத் தொடர்ந்து வந்த ‘ஆஜ்கா குண்டா ராஜ்’ என்ற இந்திப் படமும் சிரஞ்சீவிக்கு ‘வசூல் மன்னன்’ என்ற பெயரை இந்தியில் சம்பாதித்துத் தந்திருக்கிறது!
சிரஞ்சீவி நடித்து வெளிவரவிருக்கும் மூன்றாவது இந்திப் படமும் விநியோகஸ்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
சிரஞ்சீவியை ஓரமாக ஒதுங்கி நிற்கச் சொன்ன இந்தி சினிமாக்காரர்கள், இப்போது என்ன சொல்வார்கள்..?
– வேல்ஸ்