“மின் கட்டணம் உயர்வு குறித்து மக்களிடையே கருத்து கேட்டு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கபட நாடகம் ஆடுகிறார்” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் இன்று, செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:
பாஜக கொள்கை ஏற்று யார் வந்தாலும் முழு அனுமதி உண்டு. பாஜகவை பொறுத்தவரை குறுகிய மனப்பான்மையுடன் இருக்கும். நம்மிடம் இருந்து சென்று விட்டார்; திரும்பி வரும் போது ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற எண்ணம் கிடையாது. அர்ஜூன் மூர்த்தி கட்சியை விட்டு அரசியல் களத்திற்கு சென்ற போது கூட ஏன் என்று பாஜக கேட்கவில்லை. அதேபோல் இன்று வந்து இணைந்த போது கூட ஏன் என்று கேட்கவில்லை. அவரது உழைப்பால், பாஜக மேலும் வளரும் என்கிற நம்பிக்கை இருக்குகிறது.
நம்முடைய மாநில அரசு மின் கட்டண உயர்வை எதிர்த்து, தமிழகம் முழுவதும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. இது அரசிற்கு மிக அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களிடம் கருத்து கேட்டு, மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது வேண்டாமா என்று கேட்பது நாடகமாக இருக்கிறதே தவிர, இது உண்மை கிடையாது.
இப்போதே மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில நிறுவனங்களுடன் பேரம் பேச ஆரம்பித்து விட்டார். மின்சார துறை அமைச்சர் ஆங்காங்கே நடத்தும் நாடகம் வசூல் வேட்டை போடுவதற்கான கபட நாடகமாகும். மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நிறுத்தி விட்டு, ஏற்றிய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே பாஜக கோரிக்கை ஆகும். அதை மாநிலஅரசு செய்ய வேண்டும்.
தமிழகம் அளவுக்கு எந்த மாநிலமும் கடன் பெறவில்லை. அதே போல ஆன்லைன் ரம்மியால் கிட்டத்தட்ட 30 மரணங்கள் ஏற்பட்டு உள்ளது. நேரடியாக ஆன்லைன் ரம்மி தான் காரணம் என்று காவல் துறை பதிவேட்டில் பதிவாகி இருக்கின்றது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன கருத்துகளை மக்களிடையே கேட்கிறார் என்று தெரியவில்லை.
ஆன்லைன் ரம்மி என்பது உடனடியாக நிறுத்தக் கூடியது ஆகும். அடுத்தபடியாக ரம்மி விளையாட்டின் காரணமாக 31வதாக இறந்தால் அதற்கு
தான் பொறுப்பு ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் என்பது நாடகமாகும். விவசாயத்திற்கு 24 மணி நேரமாக மாற்றுவதே பாஜக கொள்கை ஆகும். இது ஆளும் கட்சியின் மின்சார துறையின் நாடகம் ஆகும். 70 ஆண்டுகளுக்கு பிறகு கழிப்பறை கட்டிக் கொடுப்பது என்பது கூட இலவசமாக பார்க்காமல் மக்களின் உரிமை பொருளாக பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.