புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2017 டிசம்பரில் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். புதிய தலைவராக சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி கடந்த 2017 டிசம்பர் 16-ம் தேதி பதவியேற்றார்.
கடந்த 2019 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பின் கடந்த 2019 ஆகஸ்ட் 10-ம் தேதி காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை ஓராண்டுக்கு அவர் தற்காலிக தலைவராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ஓராண்டு பதவி காலம் கடந்த 2020 ஆகஸ்டில் நிறைவடைந்தது. அப்போது டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதுவரை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
காரிய கமிட்டி கூட்டம்
இந்த சூழலில் காங்கிரஸின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. கடந்த ஏப்ரல் 16 முதல் மே 31 வரை வட்ட அளவிலான உட்கட்சி தேர்தல், ஜூன் 1 முதல் ஜூலை 20 வரை மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளுக்கான தேர்தல், ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை மாநில தலைவர்களுக்கான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கால அட்டவணையை முறையாக பின்பற்றி வருகிறோம்.
வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இறுதி செய்யப்படும். கட்சியின் புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுத்து வருவதால்அவரது தங்கை பிரியங்காவை தலைவராக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இப்போதே தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தொடங்கிவிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபில் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து விலகினார். சமாஜ்வாதி ஆதரவுடன் தற்போது அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த 16-ம்தேதி ஜம்மு காஷ்மீரின் பிரச்சார கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு மணி நேரத்தில் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல இமாச்சல பிரதேச வழிகாட்டு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஆனந்த் சர்மா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.