அவசர காலத்தில், நெருக்கடி காலத்தில் யார் நமக்கு கை கொடுக்கிறார்களோ இல்லையோ, நம்மிடம் இன்ஷூரன்ஸ் இருந்தால் அது நமக்கு கைகொடுக்கும் என்பதைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். ஆனால் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் எல்லோராலும் அதை சரியாக நிர்வகிக்க முடிவதில்லை. சில எதிர்பாராத காரணங்களால் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தொடர்வதில் சிக்கல் வந்துவிடுகிறது. இதனால் அதுவரை செலுத்திய பிரீமியம் வீணாகிவிடுகிறது.
பாலிசிதாரர்களின் பிரீமியம் வீணாகிவிடக்கூடாது என்பதற்காகவும், பாலிசியின் பலன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எல்.ஐ.சி காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்தில் பாலிசி எடுத்தவர்கள் ஏதேனும் காரணத்தால் பிரீமியம் தொகையைத் தொடர்ந்து செலுத்திவராமல் பாலிசி காலாவதி ஆகியிருந்தால் அதை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
யூலிப் (ULIP) அல்லாத பாலிசிகள் அனைத்தையும் பாலிசிதாரர்கள் குறைந்த அபராதத்துடன் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
எல்.ஐ.சி பாலிசிகள் காலாவதி ஆகியிருந்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்தப்பட்ட முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையில் பிரீமியம் செலுத்தாமல் காலாவதி ஆன பாலிசிகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதுப்பிக்கப்படும் பாலிசிகளுக்கான தாமத கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்படும் எனவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.
இந்த சலுகை 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ‘மைக்ரோ’ காப்பீடு திட்டங்களுக்கு காலதாமத கட்டணத்தில் 100 சதவிகிதம் தள்ளுபடி உண்டு என்று கூறியுள்ளது.
காப்பீடு துறையில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற எல்.ஐ.சி தற்போது பங்குச் சந்தையிலும் வர்த்தகமாகிவருகிறது. இதனால் அதிக வெளிப்படைத்தன்மை உருவாகி உள்ளது. பாலிசிதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி உள்ளது. பாலிதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டு பலன் அடையலாம்.