மதுரை: மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனைகளை சரி செய்யாததால் பெரும்பான்மை வார்டுகளில் உள்ள குடியிருப்பு சாலைகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் பொங்கி ஓடை போல் ஓடுகிறது.
மதுரை மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் போடப்பட்ட பாதாள சாக்கடை தற்போது சிதலமடைந்து பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி கழிவு நீர் பொங்கி சாலைகளில் ஓடுகிறது. புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை வசதியில்லை. சில வார்டுகளில் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் மோசமடைந்துள்ளது.
அதனால், புறநகர் 28 வார்டுகளில் கழிவுநீர் நிரந்தரமாகவே சாலைகளில் செல்கின்றன. தற்போது தான் 28 வார்டுகளில் பாதாள சாக்கடை புதிதாக போடப்படுகின்றன. பாதாள சாக்கடை புதிதாக போடப்பட்ட வார்டுகளில் கூட இன்னும், கழிவுநீர் இணைப்பு வீடுகளுக்கு கொடுக்கப்படவில்லை. பாதாள சாக்கடை இணைப்பு வழங்க மேலும் 6 மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது. பழைய வார்டுகளில் குடிநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்தும் வருகின்றன. தற்போது தற்காலிகமாக பாதாள சாக்கடை பிரச்சனைக்கு மாநகராட்சியால் தீர்வு காண முடியவில்லை.
மதுரை 22வது வார்டு விளாங்குடி சூசை நகரை சேர்ந்த ஜெரால்டு கூறுகையில், ‘‘விளாங்குடி 22-வது வார்டில் சூசை நகர் 2-வது தெருவில் மட்டும் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்துடன் தெருவில் ஆறு போல் ஓடுகிறது. இந்த தெருவில் குடிநீரிலும் அடிக்கடி சாக்கடை நீரும் கலந்து வருகிறது. இந்த தெரு தாழ்வாக இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி பொதுமக்கள் நடக்க முடியாத அவல நிலை உள்ளது. பத்தாண்டுகளாக இந்த துயரங்கள் நீடிக்கிறது. இந்த தெருவிற்கு, சாலை வசதி, கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாதாள சாக்கடை பராமரிப்பும், இல்லாத இடங்களில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. கழிவு நீர் கலப்பதாக புகார் செய்தால் அதற்கு தீர்வு காணப்படுகிறது. அனைத்து பிரச்சனைகளும் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்’’ என்றனர்.