அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுகு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே, இலவசங்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடக விவாதம் ஒன்றில் பேசிய பேச்சு வைரலானது. அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த ஊடக விவாதங்கள், நேர்காணல் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒருமுறை ட்ரெண்டிங் செய்தியாகியுள்ளார்.
அதேசமயம், பிடிஆரின் பேச்சுகள் கடைக்கோடி மக்களின் அரசியலாக மாறுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் கரண் தப்பாருக்கு பிரத்யேகமாக பேட்டி ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிடிஆர் அளித்திருந்தார். அப்போது பேசிய பிடிஆர், இந்திய ஒன்றியத்தின் ஒற்றை பரிமாண பார்வையை குஜராத் முதல்வராக மோடி இருந்த போது தெரிவித்த வார்த்தைகளை கொண்டே தாக்கினார்.
அத்துடன், மாநில சுயாட்சி, மொழி உரிமைகள், வரி வசூல் போன்றவற்றில் இந்திய ஒன்றியத்தின் ஏதேச்சதிகார போக்கை பேரறிஞர் அண்ணாவின் பாராளுமன்ற உரையில் இருந்தும், மொழி உரிமைகளுக்கான தமிழ் நாட்டின் போராட்டம் சுதந்திர இந்தியாவிற்கு முன்பே இருந்து வருவதையும் பேட்டியின் போது பிடிஆர் சுட்டிக்காட்டினார். பாஜகவை கடுமையாக விமர்சித்து விட்டு, இறுதியாக ‘நான் கடவுள் நம்பிக்கையாளர்’ என்று பிடிஆர் சொல்வது ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பாடம் எடுக்கும் விதமான பிடிஆரின் பேச்சுகள், தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். அதனை செய்வதற்கான முக்கியப்பங்கு திமுகவுக்கு இருக்கிறது. பிடிஆரின் பேச்சுகளை திமுக ஐடி விங் சமூக ஊடகங்களின் வாயிலாக முற்றிலும் கொண்டு செல்லவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், பல்வேறு விஷயங்களை பல்வேறு தளங்களில் இருந்து பிடிஆர் பேசும்போது, ஏதோ ஒரு இடத்தில் கோபப்படவோ; இல்லை வார்த்தைகள் தடித்து விட்டாலோ அதனை சாமானிய மக்கள் வரை கொண்டு சேர்க்கும் பாஜகவின் வேலைத்திட்டத்தை ஒப்பீட்டளவில் திமுக செய்யவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டின் நிதி இறையாண்மை, பொது சொத்துக்களை விற்கும் போது மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கு, மாநிலங்கள் கடன் பெறுவதில் போடப்பட்ட தடை, இலவசங்கள் என்பது சமூக நலத்திட்டம், அவை சமூகத்தில் ஆற்றிய பங்கு என்ன என்பது பற்றியெல்லாம் பல்வேறு விவாதங்களை பிடிஆர் எழுப்புகிறார். அவர் எழுப்பும் கேள்விகளை தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் எழுப்ப வேண்டும், அதுபற்றி அவர்கள் விவாதிக்க வேண்டும். இதில் திமுகவுக்கு முக்கிய பங்கிருக்கிறது. அதன் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும், மாநில சுயாட்சி பேசுபவருமான ஸ்டாலின் இதனை முன்னின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திமுக மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க பாசிசத்திற்கு மதவாதத்திற்கு எதிரான வேலை திட்டத்தோடு செயல்படும் கட்சிகள் அமைப்புகள் ஒன்று கூடி இதற்கான வேலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர் அன்பே செல்வா, “பிடிஆரின் கருத்துக்கள் குறைந்தபட்சம் திமுகவின் கடைக்கோடி தொண்டன் வரைக்குமாவது கொண்டு சேர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுக்க திமுக நிர்வாகிகளுக்கு திராவிட பயிற்சி பட்டறை நடந்து கொண்டிருக்கிறது, குறைந்தபட்சம் அவர்கள் வரைக்குமாவது பிடிஆரின் கேள்விகள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.” என்கிறார்.
தொடர்ந்து அன்பே செல்வா பேசுகையில், “இரண்டு நாட்களாக ஆங்கில ஊடகங்களின் மூலமாக இந்தியாவின் படித்த வர்க்கத்திடம் கூட்டாட்சி குறித்து மிகப் பெரிய தாக்கத்தை பிடிஆர் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சண்டை இந்தியாவின் படித்த வர்க்கத்திடம் நிகழ்வதைப் போலவே தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிகழ வேண்டும். அதை திமுக மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டின் நிதி இறையாண்மை தொடர்பாக பிடிஆர் எழுப்பும் கேள்விகள் இங்குள்ள பெரியாரிய, தமிழ் தேசிய, இடதுசாரி அமைப்புகளுக்குமான முக்கியமான கோரிக்கைதான். அவர்களும் இதனை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.” என்றும் வலியுறுத்துகிறார்.