அமெரிக்காவில், போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சேர்ந்து ஒரு நபரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு போலீஸ் அதிகாரிகள் தாக்கும் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க நாளிதழ்களில் வெளியான செய்தியின்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கன்வீனியன்ஸ் ஸ்டோர்(convenience store) ஊழியருக்கு ஒருவர் மிரட்டல் விடுத்ததாக புகார் வந்ததையொட்டி, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை, போலீஸ் அதிகாரிகள் மூவர் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். இதனை அந்தப் பகுதியிலிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
பின்னர் வீடியோ வைரலானதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வர, சம்பந்தப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து, க்ராஃபோர்ட் கவுண்டி ஷெரிப் ஜிம்மி டாமண்டே(Jimmy Damante) வெளியிட்ட அறிக்கையில், “இதில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் கிராஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அதிகாரிகள் என்றும், ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும் தெரியவந்திருக்கிறது. மேலும், இவர்கள் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், இது குறித்து மாநில காவல்துறை விசாரணை மேற்கொள்ளுமாறு, ஷெரிப் அலுவலகம் கோரிக்கை விடுத்திருக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.