சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில் எல்ஜிபிடிக்யூ+ குறித்த உரிமை வாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் மட்டும் அதற்கான தடைகள் தொடர்ந்து நீடித்து வந்தன.
எனினும், அங்குள்ள எல்ஜிபிடிக்யூ+ செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தங்களுக்கான உரிமைகளுக்கு வலுவான குரல் எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில்தான் தன்பாலின ஈர்ப்பை குற்றம் என சொல்லும் சிங்கப்பூரின் 377-வது சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் பிரதமர், லீ சியன் லூங் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்று தொலைகாட்சியில் அறிவித்தார்.
இதுகுறித்து லூங் தொலைகாட்சியில் பேசும்போது, ”இதுதான் சரியான செயல்.பெரும்பாலான சிங்கப்பூர் குடிமக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதால், இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்றார்.
நீக்கம் குறித்து சிங்கப்பூர் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் பேசும்போது, “நாங்கள் இறுதியில் சாதித்துவிட்டோம். இறுதியில் அது நடந்துவிட்டது. இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார்.