இன்று தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் தெலுங்கு திரையுலகனின் முன்னணி நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. சில மாதங்களுக்கு முன்பு தன் மகன் ராம் சரணுடன் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா’ படம் வெளியானது. மோகன் ராஜாவின் இயக்கத்தில் ‘காட்ஃபாதர்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே புரொடக்ஷன் டிசைனர், கலை இயக்குநராக இருக்கும் சுரேஷ் செல்வராஜனிடம் சிரஞ்சீவி குறித்து நம்மிடையே பேசினார்.
‘‘ரஜினி சாரோட பேட்ட படத்துல ஒர்க் பண்ணினது இப்ப வரைக்குமே கனவு மாதிரிதான் இருக்கு. அதையடுத்து சிரஞ்சீவி சார் ஸ்டார் படம் ‘ஆச்சார்யா‘ கிடைச்சது இன்னொரு மகுடம் சூடினது மாதிரி சந்தோஷமா இருந்துச்சு. அந்த படத்துக்காக பொல்யூஷனே இல்லாத ஒரு ஆர்கானிக் டெம்பிள் சிட்டியை உருவாக்கினோம். ஒரு கோயிலையும் செட் போட்டிருந்தோம். எல்லாமே பிரமாண்டமானது. என் வயசையும், சினிமா அனுபவத்தையும் ஒப்பிடும்போது எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பா நினைக்கிறேன்.
ஏன்னா, 20 ஏக்கர் பரப்பரளவுல ரூ. 23 கோடி செலவுல ஒரே சிங்கிள் செட்டா போட்டிருக்கோம். `நிஜமான நகரமா இருக்கே’ன்னு சொல்லி அதை பார்த்த எல்லாருமே சிரஞ்சீவி சார்கிட்ட பாராட்டிச் சொன்னாங்க. சாருக்கும் செட் ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த படத்தோட படப்பிடிப்பிலேயே ஒருநாள் என்னைக் கூப்பிட்டு ‘என் அடுத்த படம் ‘காட்ஃபாதர்‘லேயும் நீங்க தான் ஆர்ட் டைரக்ஷன் பண்றீங்கன்னு’ சொல்லி இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார்.
‘ஆச்சார்யா‘ அளவுக்கு ‘காட்ஃபாதர்‘ல அவ்வளவு செட் வேலைப்பாடுகள் இல்லைனாலும், சிரஞ்சீவி சாரும் சல்மான் கான் சாரும் இணைந்து ஆடும் ஒரு பாடலுக்காக மும்பையில பெரிய செட் போட்டிருந்தோம். அதோட செட் ஒர்க்கே ஒரு மாசம் நடந்துச்சு. பிரபுதேவா மாஸ்டர்தான் நடன இயக்குநராக இருந்தார். ஆக்ஷன் சீக்குவென்ஸ்களுக்காகவும் சில விஷயங்கள் பண்ணினோம். அதை பார்த்த சிரஞ்சீவி சார் என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டிருந்தார்.
சார் எப்பவுமே சிம்பிள் அண்ட் ஹம்பிள்தான். அவ்ளோ இறங்கி பழகுவார். அவர்் வீட்டுக்கு போய் அவர் கையால டீ குடிச்சிருக்கேன். வீடியோல பர்த் டே விஷ் ரெடி பண்ணி, அவருக்கு அனுப்பினேன். இப்ப விகடன் மூலமா அவருக்கு வாழ்த்து சொல்றது இன்னும் சந்தோஷமா இருக்கு. இந்த ‘காட்ஃபாதர்‘ அவர் எனக்கு கொடுத்த பிறந்தநாள் பர்சுனுதான் சொல்லணும்’’ என பூரிக்கிறார் சுரேஷ் செல்வராஜன்.